ஏனாம் அருகே பயங்கர விபத்து ஆட்டோ மீது பஸ் மோதி 7 பெண் தொழிலாளர்கள் பலி

*8 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலம் ஏனாம் அருகே ஆட்டோ மீது தனியார் பஸ் மோதியதில் 7 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியம் ஆந்திராவையொட்டி உள்ளது. ஏனாம் பகுதியை சேர்ந்த பெண்கள், ஆந்திரா மாநிலம் காக்கிநாடா மாவட்டம் தல்லாரேவு மண்டா கொரிங்கா கிராமத்தில் உள்ள தனியார் இறால் பண்ணை நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். அதன்படி, நேற்று, ஏனாமில் இருந்து 14 பெண்கள் வழக்கம்போல் நேற்று வேலைக்கு சென்றனர். வேலை முடிந்து பிற்பகல் 3 மணியளவில் அங்கிருந்து ஷேர் ஆட்டோவில் ஏனாமிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஆட்டோவை ஏனாம் பரம்பேட்டாவை சேர்ந்த கிட்டி வெங்கடேஸ்வரா (39) என்பவர் ஓட்டி வந்தார். இறால் கம்பெனியை கடந்து 500 மீட்டர் தூரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் தல்லாரேவு மண்டல் கொரிங்கா சித்ராமபுரம் என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த தனியார் சொகுசு பேருந்து, ஷேர் ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ஆட்டோ சுக்கு
நூறாய் அப்பளம் போல் நொறுங்கியது. ஆட்டோவில் பயணம் செய்த ஏனாம் பகுதியை சேர்ந்த கோட்டீஸ்வர ராவ் மனைவி சேசெட்டி வெங்கடலட்சுமி (41), சத்திபாபு மனைவி கர்ரி பார்வதி (42), சிவா மனைவி கல்லி பத்மா (38), சந்தரராவ் மனைவி நிம்மகாயா லட்சுமி (54), ஜக்கா ராவ் மனைவி குடப்பானிட்டி சத்தியவதி (38), ராம்பாபு மனைவி பொக்க ஆனந்த லட்சுமி (47) ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

மேலும், சிவா மனைவி சிந்தப்பள்ளி (38) என்பவர் காக்கிநாடா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், நொட்ல சத்யவேணி (28), லட்சுமன் மனைவி மல்லாடி கங்காபவானி (25), சிவ ராமகிருஷ்ணா மனைவி ஓலெட்டி லட்சுமி (35), வீரசுவாமி மனைவி ரச்ச வெங்கடேஸ்வரம்மா (45), னு மகள் கோட்டி நீலிமா (26), வெங்கட ரமணா மகள் புத்பனெட்டி பிரபாவதி (18), சிந்தபள்ளி பங்கயம்மா (50) ஆகிய 7 பேரும் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடினர்.

அவர்கள் காக்கிநாடா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆட்டோ டிரைவர் கிட்டி வெங்கடேஸ்வராவும் படுகாயம் அடைந்தார். அவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து குறித்து கொரிங்கா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். காக்கிநாடா மாவட்ட நிர்வாகமும் விசாரித்து, புதுச்சேரி மாநில ஏனாம் நிர்வாகத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இதற்கிடையே, விபத்து குறித்து தகவலறிந்த ஏனாமை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான மல்லாடி கிருஷ்ணாராவ் காக்கிநாடா தனியார் மருத்துவமனைக்கு சென்று, விபத்தில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் பெண் தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், ஏனாம் தொகுதி எம்எல்ஏ கொல்லப்பள்ளி சீனிவாச அசோக், எஸ்பி ரகுநாயகம் ஆகியோரும் காயமடைந்த பெண்களை சந்தித்து ஆறுதல் கூறினர். விபத்தில் புதுச்சேரி மாநிலம் ஏனாமை சேர்ந்த 7 பெண் தொழிலாளர்கள் பலியான சம்பவம் சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த பெண்களுக்கு தலா ₹1 லட்சம் நிவாரணம் -முதல்வர் ரங்கசாமி உத்தரவு

விபத்தில் உயிரிழந்த 7 பெண் தொழிலாளர்களுக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்குவதற்கு முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கவும், அதனை கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

The post ஏனாம் அருகே பயங்கர விபத்து ஆட்டோ மீது பஸ் மோதி 7 பெண் தொழிலாளர்கள் பலி appeared first on Dinakaran.

Related Stories: