கத்திரி வெயில் கொளுத்தி வரும் சூழலில் குற்றாலம் மெயின் அருவி தண்ணீரின்றி வறண்டது-சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தென்காசி : குற்றாலத்தில் தொடர் வெயில் காரணமாக மெயின் அருவி தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. அதே நேரத்தில் ஐந்தருவிகளில் பாறையை ஓட்டினாற் போல் தண்ணீர் விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தென்காசி, குற்றாலம் பகுதியில் இந்தாண்டு ஏப்ரல், மே கோடை காலத்தில் வழக்கத்தை விட அதிகமாக வெயிலின் தாக்கம் காணப்படுகிறது. இதற்கிடையே 3 நாட்கள் பெய்த பலத்த மழையின் காரணமாக கடந்த வாரம் மெயின் அருவியில் தடை விதிக்கப்படும் அளவிற்கு தண்ணீர் விழுந்தது. ஆனால் மொத்தத்தில் மூன்று தினங்கள் மட்டுமே தண்ணீர் விழுந்தது. தற்போது ஒரு வார காலமாக மழை இல்லை.

பகல் வேளையில் வெயில் தாக்கம் காரணமாக அருவிகள் வறண்டு காணப்படுகிறது. மெயின் அருவி மற்றும் புலி அருவி ஆகியவை தண்ணீர் இல்லாமல் அடியோடு வறண்டு விட்டது.
பழைய குற்றாலத்திலும், ஐந்தருவியிலும் சிறிதளவு பாறையை ஒட்டினாற் போன்று தண்ணீர் விழுகிறது. இதற்கிடையே காலை மற்றும் மாலை வேளைகளில் தென்மேற்கு பருவக்காற்று தென்காசி, குற்றாலம் பகுதிகளில் சற்று வீசுகிறது.

இதனால் காலை மற்றும் மாலை வேளைகளில் சற்று இதமான சூழல் நிலவுகிறது. வழக்கமாக சித்திரை மாதம் பத்தாம் தேதி முதல் தென்மேற்கு பருவக்காற்று வீச துவங்கும். இந்த தென்மேற்கு பருவக்காற்றானது ஜூன் மாதம் துவங்கும் தென்மேற்கு பருவமழை அதாவது குற்றாலம் சீசனுக்கு முன்னோட்டமாக தென்காசி, குற்றாலம் பகுதி மக்களால் பார்க்கப்படுகிறது.

வழக்கமாக தென்காசி குற்றாலம் பகுதிகளில் அக்னி நட்சத்திரம் சமயத்தில் வெயிலின் தாக்கம் தெரியாத அளவிற்கு தென்மேற்கு பருவக்காற்று நன்றாக வீசும். ஆனால் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பகல் வேளைகளில் வெயிலின் தாக்கமே அதிகமாக உள்ளது. காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டும் இதமான காற்றை உணர முடிகிறது.

இதற்கிடையே கடந்த வாரம் அருவிகளில் திடீரென பெய்த மழையின் காரணமாக தண்ணீர் விழுந்த போது குற்றாலம் செல்ல வேண்டும் என்று திட்டமிட்ட பலர் தாமதமாக தற்போது குற்றாலத்திற்கு வருகை தந்து வறண்டு கிடக்கும் அருவிகளை ஏமாற்றத்துடன் பார்வையிட்டு திரும்பிச் சென்றனர்.

The post கத்திரி வெயில் கொளுத்தி வரும் சூழலில் குற்றாலம் மெயின் அருவி தண்ணீரின்றி வறண்டது-சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: