நான் செய்யும் சேவைகளை மறந்துவிட்டு விமர்சிக்கிறார்கள்-கவர்னர் தமிழிசை வேதனை

புதுச்சேரி : உலக செஞ்சிலுவை தினத்தையொட்டி செஞ்சிலுவை தினம் கவர்னர் மாளிகையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் கவர்னர் தமிழிசை கலந்துகொண்டு செஞ்சிலுவை சங்கத்தின் வலைதளத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து, இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பாராட்டு சான்றிதழை காரைக்கால் மாவட்ட முன்னாள் ஆட்சியரும், துறைமுக இயக்குநருமான முகமது மன்சூருக்கு வழங்கினார். மேலும், இளைஞர் செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும், செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளை சேர்ந்த ஆதரவற்றோர் காப்பகங்களுக்கு சமையலறை உபகரணங்களை வழங்கினார்.

இவ்விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது: செஞ்சிலுவை சங்கத்தினர் புதுச்சேரியில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் சென்று இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தையும், பள்ளிகளில் இளநிலை செஞ்சிலுவை சங்கத்தையும் ஏற்படுத்தி சிறப்பாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும். செஞ்சிலுவை சங்கத்தினர் ஒவ்வொரு மாதமும் கண்டிப்பாக ஏதாவது ஒரு சேவை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு வழிகாட்டி உதவ வேண்டும். பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தோடு இணைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் 10 கோடி பேர் போதைக்கு அடிமையாகி இருக்கிறார்கள். இது இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. புதுச்சேரி செஞ்சிலுவை சங்கம் சிறப்பு பணியாகவே இதனை எடுத்து போதை பழக்கத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

எங்கெல்லாம் சேவை நடக்கிறதோ, அங்கெல்லாம் சேவை மட்டுமல்ல நானும் இருப்பேன். நான் செய்யும் சேவை எல்லாம் மறந்துவிட்டு சிலர் விமர்சிக்கிறார்கள். அதை பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. புதுச்சேரியைப் பொருத்தமட்டில் மருத்துவமனைகளாக இருக்கட்டும், பள்ளிகளாக இருக்கட்டும் அங்குள்ள குறைகளைக் கண்டறிந்து பெருநிறுவனங்கள் சமூக பங்களிப்பு திட்டத்தின் மூலமாக நல்ல கழிப்பிட வசதிகளை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம்.

இந்தியாவில் காசநோயை 2025ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று பிரதமர் உறுதி எடுத்து இருக்கிறார். அதில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் நோயாளிகளை தத்தெடுத்து அவர்களுக்கு ரூ.750 மதிப்பிலான சத்து பொருட்களை கொடுக்க வேண்டும். ரத்த சோகை நோயை ஒழிப்பதிலும் செஞ்சிவைச் சங்கத்தின் பங்கு இருக்க வேண்டும். என்றார்.

இதில் கவர்னர் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, சுகாதாரத்துறை இயக்குநர் ராமுலு, இந்திய செஞ்சிலுவை சங்க தலைவர் லட்சுமிபதி, துணை தலைவர் சோழசிங்கராயர், செஞ்சிலுவை சங்க அதிகாரிகள், செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

The post நான் செய்யும் சேவைகளை மறந்துவிட்டு விமர்சிக்கிறார்கள்-கவர்னர் தமிழிசை வேதனை appeared first on Dinakaran.

Related Stories: