தேனி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற வீரபாண்டி சித்திரை திருவிழா இன்று தொடக்கம்

தேனி: தேனி அருகே வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று முதல் கோலாகலமாக தொடங்கியது. தேனி அருகே வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்திரை திருவிழா எட்டு நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இரவு, பகல் என தொடர்ந்து நடக்கும் திருவிழாவைக் காண தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். இச்சிறப்பு வாய்ந்த வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்கான கம்பம் நடுதல் நிகழ்ச்சி கடந்த மாதம் 19ம் தேதி நடந்தது.

முக்கொம்பு நடப்பட்ட நாள் முதல் கடந்த 21 நாட்களாக கம்பத்தையே அம்மனாக கருதி, கம்பத்திற்கு மாவுபூஜை நடத்தப்பட்டு வந்தது. 21 நாள் முடிவடைந்ததையடுத்து, கம்பம் நடுதல் முடிந்து 22ம் நாளான இன்று சித்திரை திருவிழா கோலாகலத்துடன் தொடங்கியது. இதனையடுத்து, இத்திருவிழா வருகிற 16ம் தேதி வரை நடக்க உள்ளது. வருகிற 12ம் தேதி தேர்த்திருவிழா நடக்க உள்ளது. சித்திரைத் திருவிழாவையொட்டி உப்புக்கோட்டை பிரிவு மற்றும் ஆரம்பசுகாதர நிலையம் அருகில் என இரண்டு இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. கோயில் வளாகத்தில் பேரிடர் மீட்பு பணிக்காக தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், திருவிழா நடக்கும் பகுதிகளில் குற்றச்சம்பவங்களை கண்காணிக்க கண்காணிப்பு கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேனி மாவட்ட போலீஸ் எஸ்.பி பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்திருவிழாவைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருவதையொட்டி, திண்டுக்கல், மதுரை, உசிலம்பட்டி மட்டுமின்றி தேனி மாவட்டத்தின் தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, கம்பம், கூடலூர், வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. திருவிழாவையொட்டி நேற்று இரவு முதலே பல்லாயிரகணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனான அக்னிச்சட்டி எடுத்தல், முடிகாணிக்கை செலுத்தி வருகின்றனர்.

The post தேனி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற வீரபாண்டி சித்திரை திருவிழா இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: