தெலங்கானா மாநிலத்தில் ரசாயனம், அழுகிய மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இஞ்சி பூண்டு பேஸ்ட்

* தொழிற்சாலைக்கு ‘சீல்’ * 2 பேர் கைது

திருமலை : தெலங்கானா மாநிலத்தில் ரசாயனம் மற்றும் அழுகிய மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இஞ்சி பூண்டு பேஸ்ட் தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்து, இதுதொடர்பாக இருவரை கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள கடேதான் பகுதியில் ஏராளமான உணவுப்பொருள் தயாரிப்பு ஆலைகள் மற்றும் விற்பனை கூடங்கள் இயங்கி வருகிறது. இங்கு சுகாதாரமற்ற முறையிலும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் ஆபத்தான ரசாயன பொருட்களை கொண்டு உணவு பொருட்கள், தயார் செய்வதாக புகார்கள் எழுந்தது.

இதையடுத்து சைபராபாத் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அங்குள்ள தொழிற்சாலைகளில் நேற்று முன்தினம் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு தொழிற்சாலையில் சுகாதாரமற்ற தண்ணீரை பயன்படுத்தி, ஆபத்தான ரசாயனங்கள் மூலம் அழுகிய இஞ்சி, பூண்டு உள்ளிட்ட மூலபொருட்களை கொண்டு பேஸ்ட் தயாரிக்கப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து, அங்கிருந்த ஒரு அறையில் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை பேக் செய்வதற்காக கவர்ச்சிகரமான பாக்கெட்டுகளை சுகாதாரமற்ற இடத்தில் கொட்டி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த சுகாதாரமற்ற 500 கிலோ இஞ்சி பூண்டு பேஸ்ட், 200 லிட்டர் அசிட்டிக் அமிலம், 550 கிலோ அசைவ மசாலா பாக்கெட் மற்றும் மாம்பழ குளிர்பானம் தயாரிக்க வைத்திருந்த மூலப்பொருட்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நிறுவனத்திற்கு சீல் வைத்து, மேலாளர்கள் 2 போரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தெலங்கானா மாநிலத்தில் ரசாயனம், அழுகிய மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இஞ்சி பூண்டு பேஸ்ட் appeared first on Dinakaran.

Related Stories: