திருக்களூர் அகழாய்வில் பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு

ஸ்ரீவைகுண்டம் : ஆதிச்சநல்லூர் வாழ்விட பகுதியை கண்டறிய திருக்களூரில் அகழாய்வில் வரலாற்று காலம் முதல் இரும்பு காலம் வரையிலான பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் கடந்த வருடம் தொடங்கி அருங்காட்சியக பணிகளும் நடந்து வருகிறது. ஆதிச்சநல்லூர் வாழ்விடப்பகுதிகளை கண்டறிய சுற்றியுள்ள திருக்களூர், அகரம், கொங்கராயகுறிச்சி, ஆதிச்சநல்லூர், கருங்குளம் ஆகிய 5 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்று மத்திய தொல்லியல் துறையினர் அறிவித்தனர்.

இதனையடுத்து கடந்த வருட இறுதியில் முதல் முறையாக வாழ்விடப்பகுதிகளை கண்டறிய திருக்களூரில் அகழாய்வு பணிகள் தொடங்கியது. இதற்காக வரலாற்றுக்கால கல்வெட்டுகளை கொண்ட சேர, சோழ, பாண்டீஸ்வரர் திருக்கோயில் அருகே பணிகள் தொடங்கியது.

அகழாய்வு பணிக்காக மூன்று அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதில் வரலாற்றுக்காலம் முதல் இரும்பு காலம் வரையிலான மண்ணடுக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு அதிசயமாக 20 செமீ ஆழத்தில் ஐந்து வரிசை கொண்ட சுடப்படாத மண் செங்கல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செங்கல்கள் 26 செமீ நீளம் 18 செமீ அகலம் 8 செமீ உயரத்தில் கிடைக்கப்பட்டுள்ளது. மற்றொரு அகழாய்வுக்குழியில் நான்கு தரைத்தளங்கள் உள்ளது. முதல் மற்றும் இரண்டாம் தரைத்தளங்களில் சுடுமண் குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நான்காம் தரைத்தளத்தில் அடுப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கு வரலாற்று காலம் முதல் இரும்பு காலம் வரையிலான பானை ஓடுகள் அதாவது சிவப்பு பானை, கருப்பு சிவப்பு பானை, மெருகேற்றப்பட்ட கருப்பு பானை, மெருகேற்றப்பட்ட சிவப்பு பானை மற்றும் பழுப்பு நிறப்பானை வகை ஓடுகள் கிடைத்துள்ளன.மேற்பரப்பு முதல் 2மீ ஆழம் வரை பல வண்ணங்கள் கொண்ட பாசிகள் மற்றும் உடைந்த வளையல்கள் கிடைக்கப்பெறுகின்றன. பச்சை, சிவப்பு, கருப்பு, வெள்ளை ஆகிய வண்ணங்களிலும் வட்டம், உருளை, தட்டு ஆகிய வடிவங்களில் பாசிகள் உள்ளது.

அதுமட்டுமின்றி இரும்பு பொருட்கள், செம்பு காசுகள் மற்றும் சுடுமண் உருவங்கள் கிடைக்க பெற்றுள்ளது. வாழ்விடப்பகுதிகளை கண்டறிவதற்கான தேடல் தொடர்பான அகழாய்வில் பல்வேறு பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டு வருவது தொல்லியல் ஆர்வலர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

The post திருக்களூர் அகழாய்வில் பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: