ஜல்லிக்கட்டில் வாடிவாசல் தடுப்புக் கட்டையில் மோதிய கருப்பு கொம்பன் காளை உயிரிழப்பு : சோகத்தில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்!!

புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் காயம் அடைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் கருப்புக் கொம்பன் காளை ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தது. புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிபட்டி பிடாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி மே 3ம் தேதி நடந்தது. இந்த ஜல்லிக்கட்டில் 800 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். பல காளைகள் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி களத்தில் நின்று விளையாடியது.

அந்த வரிசையில் வாடிவாசலில் இருந்து விஜயபாஸ்கரின் கருப்புக் கொம்பன் காளை அவிழ்த்துவிடப்பட்ட போது வாசலில் இருந்த தடுப்புக் கட்டையில் மிக பலமாக மோதி சுருண்டு விழுந்தது. காளை மீது தண்ணீர் தெளிக்கப்பட்டும் அது எழ முடியாமல் வலியால் துடித்தது. அடி பலமானதாக இருந்ததால் உயர் சிகிச்சைக்காக தஞ்சை ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கருப்புக் கொம்பன் காளை அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு கருப்புக் கொம்பன் காளையானது தொடர்ச்சியாக மயக்க நிலையிலேயே இருப்பதாகவும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை கொம்பன் யானை உயிரிழந்தது. காளை உயிரிழப்பால் விஜயபாஸ்கர் குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இதே போல் கடந்த 2019ல் இவர் வளர்த்து வந்த கொம்பன் காளை, திருநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் கம்பத்தில் முட்டி உயிரிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஜல்லிக்கட்டில் வாடிவாசல் தடுப்புக் கட்டையில் மோதிய கருப்பு கொம்பன் காளை உயிரிழப்பு : சோகத்தில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்!! appeared first on Dinakaran.

Related Stories: