நீலகிரியில் ரேஷன் கார்டுக்கு ராகி திட்டம் தொடக்கம் தமிழகத்தில் புதிதாக 14.20 லட்சம் ரேஷன் கார்டுகள் விநியோகம்: அமைச்சர் சக்ரபாணி தகவல்

ஊட்டி: தமிழகம் முழுவதும் 14 லட்சத்து 20 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ ராகி (கேழ்வரகு) வழங்கும் திட்டம் துவக்க விழா ஊட்டியில் உள்ள பாலகொலா ரேஷன் கடை வளாகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தார். கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். விழாவில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு இந்த திட்டத்தை துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு 2 கிலோ ராகி பைகளை வழங்கினர்.

விழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், சிறு தானிய ஆண்டாக ஐநா அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு சிறு தானியங்கள் உற்பத்திக்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளது. இதனையொட்டி நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ ராகி வழங்கப்படுகிறது. விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாடு முழுவதும் 14 லட்சத்து 20 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்றார். அமைச்சர் ராமசந்திரன் பேசும்போது, ‘‘தமிழ்நாடு அரசு சிறு தானியங்கள் உற்பத்திக்கு ரூ.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

The post நீலகிரியில் ரேஷன் கார்டுக்கு ராகி திட்டம் தொடக்கம் தமிழகத்தில் புதிதாக 14.20 லட்சம் ரேஷன் கார்டுகள் விநியோகம்: அமைச்சர் சக்ரபாணி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: