மும்பை – நாகர்கோவில் ரயிலில் தண்ணீர் கேட்டு பயணிகள் போராட்டம்: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பரபரப்பு

சென்னை: மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலில் தண்ணீர் வசதியில்லாததால், ஆத்திரமடைந்த பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் செங்கல்பட்டு ரயில்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை சத்ரபதி சிவாஜி அதிவிரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கர்நாடகா, ஆந்திரா, தமிழக எல்லையான அரக்கோணம், செங்கல்பட்டு, திருச்சி வழியாக நாகர்கோவில் செல்கிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இரவு 8 மணிக்கு வழக்கம்போல் மும்பை விடி ரயில் நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது.

இந்த ரயிலில் உள்ள கழிவறை, வாஷ்பேஷனில் தண்ணீர் வராமல் பயணிகள் குழந்தைகளுடன் சிரமப்பட்டுள்ளனர். கழிவறைக்கு செல்ல முடியாமலும், சாப்பிட்டு கைகழுவ முடியாமலும் அவதிப்பட்டனர். இதுகுறித்து ரயில்நிலைய அதிகாரிகளிடத்தில் புகார் அளித்துள்ளனர். அதற்கு அவர், அடுத்த ஸ்டேஷனில் சரியாகிவிடும் என கூறியுள்ளனர். ஆனால், கடைசி வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொறுமையாக காத்த பயணிகள் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்து, ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில் நிலையத்துக்கு முன்பே நடுவழியில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி, ரயில்வே அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அதிகாரிகள் ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் தண்ணீர் நிரப்பப்படும் என பயணிகளிடம் உறுதி யளித்துள்ளனர். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற பயணிகள், ரயில் செங்கல்பட்டு ரயில்நிலையம் வந்ததும் நடைமேடையில் இறங்கி ரயில்வே அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர தண்ணீர் பிரச்னை காரணமாக ரயில் பயணிகள் சிலர் நாங்கள் இருக்கும் பெட்டிக்கு வரக்கூடாது என சண்டைபோட்டுள்ளனர்.

ரயில்வே உயரதிகாரிகள் வந்து பயணிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியாக விழுப்புரத்தில் தண்ணீர் நிரப்பப்படும் என மீண்டும் உறுதியளித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கு வந்த ரயில், 12 மணிக்கு மீண்டும் இயக்கப்பட்டது. இதன் காரணமாக அடுத்தடுத்து வந்த ரயில்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். இந்த சம்பவத்தால் செங்கல்பட்டு ரயில்நிலையத்தில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு நிலவியது.

The post மும்பை – நாகர்கோவில் ரயிலில் தண்ணீர் கேட்டு பயணிகள் போராட்டம்: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: