பெரியாறு புலிகள் சரணாலயத்தில் விடப்பட்ட அரிசி கொம்பன் யானை

கூடலூர்:மூணாறு அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட அரிசி கொம்பன் யானை பெரியாறு புலிகள் சரணாலயத்தில் கண்ணகி கோயில் வனப்பகுதியில் விடப்பட்டது.கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னகானல் மற்றும் சுற்றுப்பகுதிகளில் அட்டகாசம் செய்த அரிசி கொம்பன் காட்டு யானையை பிடிக்க, வனத்துறையினர் நேற்று முன்தினம் மாலை 5 முறை மயக்க ஊசி தாக்குதல் நடத்தினர். பின்பு 4 கும்கி யானைகள் உதவி மூலம் மயக்கமடைந்த யானையின் கால்களை கட்டி, கண்களை கருப்புத்துணியால் மூடி வனத்துறை சிறப்பு வாகனத்தில் சாலை மார்க்கமாக குமுளி பகுதிக்கு கொண்டு வந்தனர்.பின்பு அரிசிக்கொம்பனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து நேற்று அதிகாலை 4 மணிக்கு பெரியாறு புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட வனப்பகுதியான கண்ணகி கோயில் வனப்பகுதிக்குள் திறந்து விடப்பட்டது.

அரிசிக்கொம்பனை பிடிக்கும்போது செலுத்தப்பட்ட மயக்க ஊசி மற்றும் அப்போது ஏற்பட்ட சிறு காயங்கள் பிரச்னையல்ல என்றும், தற்போது யானை ஆரோக்கியமாக இருப்பதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.புதிய வனப்பகுதியில் அரிசிக்கொம்பன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரை கண்காணிக்கப்படும் என கேரள வனத்துறை அமைச்சர் சசீந்திரன் தெரிவித்தார்.முன்னதாக யானை வாகனத்தில் கொண்டு வருவதை பார்க்க பொதுமக்கள் திரண்டதால், கூட்டத்தை தவிர்க்க நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை குமுளியில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தது.

The post பெரியாறு புலிகள் சரணாலயத்தில் விடப்பட்ட அரிசி கொம்பன் யானை appeared first on Dinakaran.

Related Stories: