புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபியில் 5 வருடமாக ஊதியம் தரவில்லை என 7 பேர் தற்கொலை முயற்சி

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபியில் 5 வருடமாக ஊதியம் தரவில்லை என 7 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் பல்வேறு அரசுத் துறையில் நீண்டகாலமாக பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம், நிலுவை சம்பளம் வழங்க கோரி தொடர்ச்சியாக தற்கொலை முயற்சி, சட்டமன்ற முற்றுகை போராட்டம், மறியல் போராட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபியில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 5 வருடங்களாக ஊதிய உயர்வு தராமல் காலம் தாழ்த்தி அரசு இருந்து வருகிறது. மேலும் ஊதியம் வழங்ககோரியும், நிலுவையில் உள்ள 30 மாத சம்பளத்தை வழங்ககோரியும் காந்தி வீதியில் தலைமை அலுவலகமாக உள்ள அமுதசுரபியில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இது தொடர்பாக அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் தங்களது போராட்டம் தொடர்பாக காந்திவீதியில் உள்ள அமுதசுரபி அலுவலகத்திற்கு சுமார் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று காலை வந்தனர். தங்களது கோரிக்கை தொர்பாக எந்த வித நடவடிக்கையம் எடுக்காததால் இந்த அலுவலகம் எங்களுக்கு தேவையில்லை எனவே அலுவலகத்தை இழுத்து மூடுவதாக கூறி அலுவலகத்தை இழுத்து மூடினர். இதை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெரிய கடை போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர்.

இதனால் இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது திடிரென்று 7 ஊழியர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து அவர்கள் கையிலிருந்த விஷபாட்டில்களை பிடிக்க முயன்றனர். ஆனாலும் அவர்கள் போலீசாரிடம் சண்டைபோட்டு குடித்தார்கள். அப்போது அங்கு கூடியிருந்த அனைத்து ஊழியர்களும் தங்கள் வாழ்வாதாரம் தங்கள் குடும்பம் நடுரோட்டில் இருக்கிறது.

இது தொடர்பாக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் வாழ்வதை விட சாவதே மேல் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் கடும் தள்ளுமுள்ளு இடையிலும் விஷம் குடித்த ஊழியர்களை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் காரணமாக காந்தி வீதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவிவருகிறது. இது தொடர்பாக பெரியகடை போலீசார் தற்போது காந்தி வீதியில் இருக்கும் அமுதசுரபி அலுவலகத்திலும், அரசு மருத்துவமனையிலும் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

The post புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவனமான அமுதசுரபியில் 5 வருடமாக ஊதியம் தரவில்லை என 7 பேர் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: