மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் உள்ள கோயில்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை முற்றுகையிட்டு, மீனவர்கள் வாக்குவாதம் செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
மாமல்லபுரம் அடுத்த ஈசிஆர் சாலையில் உள்ள சாலவான்குப்பம், இளந்தோப்பு, பட்டிபுலம், சூளேரிக்காடு, நெம்மேலி, புதியகல்பாக்கம், திருவிடந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சவுக்கு கன்று பயிரிட்டு பசுமையாக பராமரித்ததால் ஆங்கிலேயர்கள் நெம்மேலியை சேர்ந்த ஆளவந்தார் நாயக்கருக்கு 1054 ஏக்கர் நிலத்தினை இலவசமாக வழங்கினர். தற்போது, இந்த சொத்துக்கள் இந்துசமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த நிலங்களில் சில பகுதிகளில் ஆளவந்தார் அறக்கட்டளையின் நிலத்தை ஆக்கிரமித்து பண்ணை வீடுகள், மீனவர் பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் கோயில்கள், ரிசார்ட்டுகள், இறால் பண்ணைகள் அமைந்துள்ளது.
இதையடுத்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள ஆளவந்தார் அறக்கட்டளை நிலங்களை மீட்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலர் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்தனர். இதையடுத்து, ஆக்கிரமிப்புக்கு உள்ளான ஆளவந்தார் அறக்கட்டளை நிலங்களை மீட்டு, உடனடியாக மீட்கப்பட்ட நிலங்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, பட்டிபுலம் மீனவர் குப்பத்தில் ஆளவந்தார் அறக்கட்டளை நிலத்தில் கட்டப்பட்டுள்ள 17 வீடுகள் மற்றும் கோயில்களை தாங்களாகவே அகற்றி கொள்ள, மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வாகம் கெடுவிதித்து நோட்டீஸ் வழங்கியதாகவும், கெடு தேதி முடிந்த நிலையிலும் யாரும் ஆக்கிரமிப்புகளை அகற்றி முன்வராததால் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று இந்துசமய அறநிலையத்துறை செங்கல்பட்டு உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், ஆளவந்தார் அறக்கட்டளை செயல் அலுவலர், தலசயன பெருமாள் கோயில் செயல் அலுவலர் சரவணன் ஆகியோர் தலைமையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் சென்ற அறநிலையத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள 17 வீடுகள், அம்மன் கோயில்களை அகற்ற வந்தனர்.
அப்போது, பட்டிபுலம் மீனவர் குப்பம் நுழைவு வாயிலிலேயே பட்டிபுலம் ஊராட்சி தலைவர் வரலட்சுமி லட்சுமிகாந்தன் தலைமையில், நெம்மேலி கவுன்சிலர் தேசிங்கு முன்னிலையில் திரண்டிருந்த 100க்கும் மேற்பட்ட மீனவர்கள், அதிகாரிகளை ஊருக்குள் செல்ல விடாமல் தடுத்து, 2005ம் ஆண்டில் அப்போது இருந்த காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவு வழங்கிய ஆணையின் பேரிலேயே 17 வீடுகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் கோயில்கள் கட்டப்பட்டதாகவும், நாங்களும் நீதிமன்றம் செல்ல அவகாசம் வழங்க வேண்டும் எனவும், அதுவரை வீடுகள் மற்றும் கோயில்களை அகற்ற கூடாது என கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டு, வெளியே செல்லுமாறு கோஷம் எழுப்பினர். அதனால், அங்கு மீனவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் 4 மணி நேரமாக கூச்சல் குழப்பமாக காணப்பட்டது. பின்னர், போலீசார் மீனவர்களை சமாதானம் செய்தனர்.
இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாமல் திணறிய அதிகாரிகள் கட்டப்பட்டுள்ள 18 வீடுகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் கோயில்களை இடிக்காமல் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத்தை சந்தித்து மனு கொடுக்கவும், உயர் நீதி நமன்றம் செல்ல சில நாட்கள் மீனவர்களுக்கு அவகாசம் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லையே என மீனவர்களின் எதிர்ப்புக்கு அடி பணிந்து இந்து சமய அறநிலையத் துறை செங்கல்பட்டு உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன் உள்ளிட்ட அதிகாரிகள் மீனவர்களுக்கு பயந்து அவசர அவசரமாக அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டதையும் காண முடிந்தது.
The post ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு மீனவர்கள் வாக்குவாதம்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.
