கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் விசாரணை குழுவை மாற்ற கோரிய வழக்கு: ஐகோர்ட் நாளை இடைக்கால உத்தரவு

சென்னை: சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுவை மாற்றியமைக்க கோரி கல்லூரி மாணவிகள் தொடர்ந்த வழக்கின் இடைக்கால உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் நாளைக்கு தள்ளி வைத்துள்ளது.சென்னை, கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் 7 பேர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கலாஷேத்ரா தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், உண்மை கண்டறியும் குழுவாகவும், பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளிக்கவும் ஏதுவாக ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சட்ட விதிகளின் அடிப்படையில் பாலியல் தொல்லை புகார் குறித்து விசாரிக்க உள்விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் கலாஷேத்ரா சார்பில் பாலியல் தொல்லைகள் தடுப்பது தொடர்பாக பாலின பாகுபாடற்ற கொள்கை விரைவில் வகுக்கப்படும் என்றார். அப்போது, மாணவிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைகை, சட்டத்தை வீழ்த்தும் வகையில் நீதிபதி கண்ணன் குழு அமைக்கப்பட்டுள்ளது.

உள் விசாரணைக் குழுவும், கண்ணன் குழுவும் செயல்படக் கூடாது. உள் விசாரணை குழுவில் கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் இடம் பெறக் கூடாது என்றார்.
அதற்கு, நீதிபதி கண்ணன் குழுவில் புகார் அளிக்க வேண்டும் என எந்த கட்டாயமும் இல்லை. இக்குழுவில் அளிக்கும் புகார்கள், உள் விசாரணைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் இடைக்கால உத்தரவை நாளைக்கு தள்ளிவைத்தார்.

The post கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் விசாரணை குழுவை மாற்ற கோரிய வழக்கு: ஐகோர்ட் நாளை இடைக்கால உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: