மாயனூரில் 3 மிமீ பதிவு கரூர், சுற்றுப்புறங்களில் காற்று, மழையால் சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைப்பு

கரூர்: கரூர் மற்றும் சுற்றுப்புறங்களில் நேற்று முன்தினம் பலத்த காற்று மழை காரணமாக 50க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தன. மீட்பு பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர். கரூர் மாவட்டத்தில் கோடை வெயில் கடந்த 40 தினங்களாக வாட்டி வதைத்து வருகிறது. மேலும் கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் 107 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கரூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது.

குறிப்பாக. புலியூர் மற்றும் உப்பிடமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதி கிராமங்களான புலியூர் கஸ்பா ஜோதிவடம், ரெங்கபாளையம் வெள்ளியணை பிரிவு வழியாக செல்லும் மின் கம்பங்கள் மழைக்கு முன்பாக வீசிய பலத்த காற்றின் காரணமாக சாய்ந்தன. உப்பிடமங்கலம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் 38 மின்கம்பங்களும், புலியூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 10 மின்கம்பங்களும் சாய்ந்தன. மின்சார வசதி வழங்கக்கூடிய மின் கம்பங்கள் காற்றின் காரணமாக கீழே விழுந்ததால், பெரும்பாலான கிராமங்கள் நேற்று இரவு இருளில் மூழ்கின.

கிராமங்களில் வீழ்ந்த மின் கம்பங்களை இரவு நேரத்தில் அடையாளம் காணும் பணி தொய்வடைந்ததால் நேற்று அதிகாலை முதல் பழுதடைந்த மின் கம்பங்களை அகற்றிவிட்டு புதிய கம்பங்கள் பொருத்தி சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கரூர் மாநகருக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் காற்றின் காரணமாக விழுந்த 4 மின் கம்பங்கள் இரவோடு இரவாக சரி செய்யப்பட்டு உடனடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டது. புலியூர் மற்றும் உப்பிடமங்கலம் துணை மின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணி இன்று மாலைக்குள் முடிவடைந்து, மின் இணைப்பு வழங்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post மாயனூரில் 3 மிமீ பதிவு கரூர், சுற்றுப்புறங்களில் காற்று, மழையால் சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: