தோகைமலை அருகே மாடு மாலை தாண்டும் திருவிழா கோலாகலம்: திருச்சி மாவட்ட சலை எருது மாடு முதல் பரிசை வென்றது

தோகைமலை: தோகைமலை அருகே உள்ள கள்ளை தொட்டியபட்டியில் நடந்த மாடு மாலை தாண்டும் திருவிழாவில் திருச்சி மாவட்ட சலை எருது மாடு முதல் பரிசை தட்டிச்சென்றது. கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள கள்ளை ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டியபட்டியில் வசிக்கும் கம்பலத்து நாயக்கர் சமூகத்தினருக்கு கோணாத்தாதா நாயக்கர் மந்தையில் மாரியம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குணி உத்திர விழாவிவை ஒட்டி மாலை தாண்டும் திருவிழா நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த 17 ஆண்டுகளாக இந்த கோவிலில் விழா நடைபெறாமல் இருந்து வந்ததது. இந்நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அண்டு பங்குணி உத்திர விழாவை ஒட்டி மாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவதற்கு ஊர் முக்கியஸ்தர்கள் முடிவு செய்தனர். இதனை ஒட்டி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கப்பட்டது. அன்று முதல் இப்பகுதி பக்தர்கள் 9 நாள் விரதம் இருந்து கோணாத்தாதா நாயக்கர் மந்தையில் உள்ள மாரியம்மனுக்கு தினமும் 3 கால சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து முதல் நாள் திருவிழாவில் மாரியம்மனுக்கு கரகம் பாலித்து தாரை தப்பட்டை உருமி மேளம் முழங்க, வான வேடிக்கையுடன் வீதி உலா வந்து கோவிலில் குடிபுகுந்தது. 2 ஆம் நாள் அன்று மாரியம்மன்னுக்கு பொங்கள் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், கிடா வெட்டுதல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செய்து பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இதனை தொடர;ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று 3 ஆம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாலை தாண்டும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கோணாத்தாதா நாயக்கர் மந்தை சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டதால் திருச்சி, திண்டுக்கல், கரூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 14 மந்தையர்கள் மாலை தாண்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தனர். இவர்களை தொட்டியபட்டி கோணாத்தாதா நாயக்கர் மந்தை சார்பாக மாடுகள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் மந்தையர்களை வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மாரியம்மன் கோவில் முன்பாக அனைத்து மந்தைகளின் சலை எருது மாடுகளுக்கு புன்னிய தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தாரை தப்பட்டை உருமி முழங்க வைஸ்பேர்நாயக்கர் மந்தை எதிரே சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ள எல்லைசாமி கோவிலுக்கு சலை எருது மாடுகளை அழைத்து சென்றனர். பின்னர் எல்லை கோட்டில் சமூக வழக்கப்படி சிறப்பு பூஜை செய்து எல்லை கோட்டை வணங்கிய பின்பு, சலை எருது மாட்டிற்காக காத்திருந்தனர்.

இதேபோல் எல்லைக்கோட்டிற்கு எதிரே உள்ள எல்லைசாமி கோவிலில் சிறப்பு அபிசேகம் செய்து அனைத்து சலை எருது மாடுகளுக்கும் புன்னிய தீர்த்தம் தெளித்து மாலை ஓட்டத்தை தொடங்கி வைத்தனர். அங்கிருந்து கோணாத்தாதா நாயக்கர் மந்தையில் அமைக்கப்பட்ட மரத்தால் ஆன எல்லை கோட்டை நோக்கி சுமார் 500 க்கும் மேற்பட்ட சலை எருது மாடுகள் ஓடி வந்தது. இதில் திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள ராஜகோடங்கிப்பட்டியை சேர்ந்த ராஜகோடங்கிநாயக்கர் மந்தை மாடு முதலாவதாக ஓடி வந்து வெற்றி பெற்றது. அப்போது இவர்களின் சமூக வழக்கப்படி 3 கன்னி பெண்கள் வைத்திருந்த மஞ்சள் பொடியினை முதலாவதாக ஓடி வந்த சலை எருது மாடு மீது தூவி வரவேற்று எழும்பிச்சை பழம் பாிசாக வழங்கப்பட்டது. பின்னர் மஞ்சள் பொடி வைத்திருந்த 3 கன்னி பெண்களை எல்லை கோட்டிலிருந்து தேவராட்டத்துடன் மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து வந்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து அலங்காிக்கப்பட்ட மாரியம்மனின் கரகத்தை மஞ்சள் நீராட்டுடன் வீதி உலாக எடுத்துச்சென்று சாமிக்கு வழி அனுப்பி வைத்தனர். இதில் ஊர்நாயக்கர், மந்தா நாயக்கர் உள்பட திருச்சி, திண்டுக்கல், கரூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post தோகைமலை அருகே மாடு மாலை தாண்டும் திருவிழா கோலாகலம்: திருச்சி மாவட்ட சலை எருது மாடு முதல் பரிசை வென்றது appeared first on Dinakaran.

Related Stories: