தூத்தூர், பொய்கைப்பட்டியில் மீன்பிடி திருவிழா கோலாகலம்

துவரங்குறிச்சி: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே தூத்தூர் கண்மாயில் இன்று காலை பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றது. அய்யனார் கோயிலில் ஊர் முக்கியஸ்தர்கள் வழிபாடு செய்த பின்னர் கண்மாய்க்கு வந்து வெள்ளை துண்டு வீசி மீன்பிடி திருவிழாவை துவக்கி வைத்தனர். அப்போது கண்மாய் கரையில் குடும்பம் குடும்பமாக திரண்டிருந்த தூத்தூர் மற்றும் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் குளத்தில் இறங்கி தூரி, வலை, ஊத்தா, கட்டா போன்றவைகள் மூலம் மீன்பிடித்தனர். கெளுத்தி, விரால், ஜிலேபி உள்ளிட்ட மீன்கள் சிக்கின. அவற்றை மக்கள் மகிழ்ச்சியுடன் வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

  • திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பொய்கைப்பட்டி ஊராட்சி ஆவிக்காரன்பட்டியில் சுமார் 19 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆவிக்குளத்தில் 35 ஆண்டுகளுக்கு பின் இன்று காலை 6 மணியளவில் மீன் பிடித்திருவிழா நடந்தது. சூரிய உதயத்திற்கு முன்னதாகவே குளக்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். ஆலய வழிபாட்டிற்கு பின் விழா தொடங்கியது. குளக்கரையில் கையில் ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா உள்ளிட்ட வலைகளுடன் கூடியிருந்த பொதுமக்கள் துள்ளி குதித்து ஓடி மீன் பிடிக்க தொடங்கினர். கெளுத்தி, கட்லா, ஜிலேபி, கெண்டை, குரவை, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன.
  • திருச்சி மாவட்டம் துறையூர் அருகே திருத்தலையூர் ஏரியில் மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது. இதில் திருத்தலையூரை சுற்றி உள்ள கிராமங்களான கண்ணனூர், கட்டணம்பட்டி, பெத்துப்பட்டி, பகளவாடி, ஆதனூர் உள்ளிட்ட 25 கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மீன் பிடித்தனர். கெண்டை , கெளுத்தி, அயிரை என மிக குறைந்தளவே மீன்கள் கிடைத்ததால் மீன்பிடிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

The post தூத்தூர், பொய்கைப்பட்டியில் மீன்பிடி திருவிழா கோலாகலம் appeared first on Dinakaran.

Related Stories: