கரூர் அரசு மாதிரி பள்ளி அமைக்க இடம் தேர்வு

கரூர்: கருர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மாயனூர் ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் கருர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் ஏற்கனவே, 26 மாவட்டங்களில் அரசு மாதிரி பள்ளிகள் நடைபெற்று வருகிறது. நடப்பு கல்வி ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மாதிரி பள்ளிகள் இயங்கும் என அரசு அறிவித்ததன் அடிப்படையில் வரும் கல்வியாண்டு முதல் கரூர் மாவட்டத்தில் அரசு மாதிரி பள்ளி இயங்கவுள்ளது.

இந்த பள்ளி 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் நடைபெறுகிறது. இந்த பள்ளியில் 400 மாணவர்களும், 400 மாணவிகளும் தங்கும் விடுதி வசதியுடன் செயல்படவுள்ளது. இந்த பள்ளியில் 19 முதுகலை ஆசிரியர்களும், 10 பட்டதாரி ஆசிரியர்களும் பணிபுரிந்து பாடங்களை நடத்தவுள்ளார்கள். அனைத்து வகுப்புகளும் ஸ்மார்ட் வகுப்பறைகளாக அமைக்கப்படவுள்ளது. பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாடப் புத்தகங்களை தவிர உயர்கல்வி படிப்பதற்கான போட்டி தேர்வுகள் எழுதுவதற்கு பயிற்சி அளிக்கப்படும். குறிப்பாக, எந்தவித கட்டணமும் இல்லாமல் தமிழக அரசு இந்த பள்ளியை நடத்தவுள்ளது. அதற்காக மாயனூர் ஆசிரியர் பயிற்சி மைய வளாகத்தில் கரூர் அரசு மாதிரி பள்ளி நடத்துவதற்கு வசதியாக உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாதிரி பள்ளி மண்டல ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், மாவட்ட மாதிரி பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி, தாசில்தார் மோகன்ராஜ் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

The post கரூர் அரசு மாதிரி பள்ளி அமைக்க இடம் தேர்வு appeared first on Dinakaran.

Related Stories: