ஆஸ்கர் புகழ் பாகன் தம்பதியரை சந்தித்து பாராட்டு முதுமலை முகாமை பார்வையிட்டார் மோடி: யானைகளுக்கு கரும்பு கொடுத்து மகிழ்ச்சி

ஊட்டி: முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டார். அப்போது யானைகளுக்கு கரும்பு கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர், ஆஸ்கர் புகழ் பாகன் தம்பதியரை சந்தித்து பாராட்டினார். தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவும் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் பிரதமர் மோடி சென்னை வந்தார். சென்னையில் விரிவாக்கம் செய்யப்பட்ட பன்னாட்டு விமான நிலையம், சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் ரூ.3 ஆயிரத்து 684 கோடி மதிப்பில் முடிவுற்ற வளர்ச்சி பணிகளை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் கர்நாடக மாநிலம் மைசூருக்கு சென்றார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு சென்றார்.

அங்கு அன்று இரவு தங்கிய அவர், நேற்று காலை பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வாகனம் மூலம் சவாரி மேற்கொண்டு, இயற்கை அழகை ரசித்து வன விலங்குகளை பைனாகுலர் மூலம் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். சுமார் 22 கிமீ தூரம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சவாரி மேற்கொண்ட அவர், பின்னர் கார் மூலம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு நேற்று காலை 11 மணியளவில் வந்தார். அங்கு பிரதமர் மோடியை தமிழ்நாடு வனத்துறை முதன்மை செயலர் சுப்பிரயா சாஹு, நீலகிரி கலெக்டர் அம்ரித் மற்றும் எஸ்பி பிரபாகரன் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து முகாமில் உள்ள 28 வளர்ப்பு யானைகளை பார்வையிட்டு, கரும்பு போன்ற உணவுகளை வழங்கி மகிழ்ந்தார்.

தாயில்லா குட்டி யானைகளை பராமரித்த தம்பதியும், ஆஸ்கர் விருது பெற்ற ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படத்தில் இடம் பெற்றவர்களுமான பாகன் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியை நேரில் சந்தித்து, அவர்களை பாராட்டிய பிரதமர், அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, யானை குட்டிகள் வளர்ப்பு குறித்து கேட்டறிந்தார். பொம்மன் தம்பதியால் வளர்க்கப்பட்ட ரகு என்ற அந்த யானையை தொட்டு பார்த்து மகிழ்ந்தார். யானை ரகுவின் தலையில் தடவி கொடுத்தார். யானை ரகுவை வளர்த்தது குறித்தும் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியிடம் பிரதமர் கேட்டறிந்தார். தொடர்ந்து, தெப்பக்காடு யானைகள் முகாமில் பணியாற்றி வரும் மூத்த பாகன்கள் கிருமாறன், மல்லன் மற்றும் தேவராஜ் ஆகியோரை சந்தித்து பிரதமர் மோடி பேசினார்.

டி23 புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் காளன், மாதன், பொம்மன் மற்றும் அதிகாரிகளையும் சந்தித்து புலியை பிடித்தது குறித்து கேட்டறிந்தார். புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை மற்றும் புலிகள் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். கள இயக்குனர்களிடம் புலிகள் பாதுகாப்பு திட்டம் குறித்து பிரதமர் பேசினார். தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் மசினகுடியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டர் தளத்திற்கு சென்றார். 12 மணியளவில் மசினகுடி ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து மைசூருக்கு புறப்பட்டு சென்றார். பிரதமர் வருகையையொட்டி ஊட்டி-மைசூர் சாலையில், கூடலூர் முதல் மைசூர் வரை நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் நேற்று காலை 11 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. 2 ஆயிரம் போலீசார் ஐஜி சுதாகர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பிரதமர் மோடி புறப்பட்டு சென்ற பிறகு இச்சாலையில் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

  • பொம்மன், பெள்ளிக்கு டெல்லி வர அழைப்பு

    முதுமலை புலிகள் காப்பத்திற்கு வந்த பிரதமர் மோடி, ஆஸ்கர் விருது வென்ற ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படத்தில் நடித்த பாகன் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியை பார்த்து நலம் விசாரித்தார். அப்போது, அவர்களிடம், ‘‘ஏன் டெல்லிக்கு வரவில்லை. முடிந்தால் ஒரு முறை வாங்க. உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் கூறுங்கள். நான் அதனை நிவர்த்தி செய்ய அதிகாரிகளிடம் கூறுகிறேன். உங்கள் உடலை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்’’ என அன்புடன் கூறினார்.
  • கேமோபிளாஜ் உடையில்மிடுக்குடன் வந்த மோடி

    வனத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் கேமோபிளாஜ் எனப்படும் உடைகளை காட்டிற்குள் செல்லும்போது அணிவது வழக்கம். அதேபோன்று பிரதமர் மோடி நேற்று பந்திப்பூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் வரும்போது கேமோபிளாஜ் உடையணிந்தும், தொப்பி அணிந்தும் மிடுக்குடன் வலம் வந்தார். இந்த உடை பிரதமரை வித்தியாசமான தோற்றத்தில் காண்பித்தது. சமூக வலைத்தளங்களில் இந்த ஆடை அணிந்த மோடியின் படம் வைரலானது.
  • காரில் இருந்து இறங்கி மக்களை சந்தித்த பிரதமர்

    பிரதமர் மோடி மசினகுடிக்கு வரும் வழியில், பஜார் பகுதியில் ஏராளமான பாஜ தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் காத்திருந்தனர். அவர்களை கண்டவுடன் பிரதமர் காரை நிறுத்தச் சொல்லி இறங்கி, பொதுமக்கள் அருகில் சென்று கையசைத்தார். சில நிமிடங்கள் அங்கிருந்த பிரதமர் பின்னர் காரில் ஏறிச்சென்றார்.
  • எல்லையில்லா மகிழ்ச்சி

    பிரதமர் தங்களை சந்தித்து பேசியது குறித்து பொம்மன், பெள்ளி தம்பதியினர் கூறியதாவது: பிரதமர் நேரில் வந்து சந்திப்பார் என்று நாங்கள் கனவில்கூட நினைத்து பார்க்கவில்லை. ஆவணப்படத்தில் இடம் பெற்றதன் மூலம் பிரதமர் மோடி எங்களை வந்து பார்த்து, நலம் விசாரித்து, பாராட்டிச் சென்றது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பிரதமர் மோடி எங்கள் 2 பேரின் கைகளையும் பிடித்து பாராட்டினார். நீங்கள் யானை குட்டிகளை பராமரிப்பதற்கு பட்ட கஷ்டங்களை படத்தில் பார்த்தேன். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதனால்தான் நான் உங்களை சந்திக்க வந்தேன் என பிரதமர் எங்களிடம் கூறினார். எங்களை டெல்லிக்கு வருமாறு அழைத்தார். நாங்கள் மறுத்தோம். அப்போது அவர் நீங்கள் கட்டாயம் வரவேண்டும் என்று தெரிவித்ததாக பொம்மன், பெள்ளி தம்பதி கூறினர்.

The post ஆஸ்கர் புகழ் பாகன் தம்பதியரை சந்தித்து பாராட்டு முதுமலை முகாமை பார்வையிட்டார் மோடி: யானைகளுக்கு கரும்பு கொடுத்து மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: