ரேஷன் கடைகளில் விதிமீறலில் ஈடுபட்டால் நடவடிக்கை

கிருஷ்ணகிரி, ஏப்.7: கிருஷ்ணகிரி மாவட்டம், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு அருகில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்திலிருந்து ரேஷன் அரிசி கடத்துவது வாடிக்கையாக உள்ளது. இதை தடுக்க சிறப்பு பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் பல்வேறு நூதன முறைகளில் ரேஷன் அரிசி கடத்தல் நடப்பதாகவும் அதிகாரிகள் இதை கண்டு கொள்வதில்லை எனவும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மேலும், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை பெரும்பாலானோர் வாங்குவதில்லை.

அப்படியே வாங்கினாலும் அதை வெளி மார்க்கெட்டில் விற்று வருகின்றனர். இந்நிலையில், ரேஷன் கடைகளில் இருந்தே, ரேஷன் அரிசியை கடத்தலில் ஈடுபடுபவர்கள் வாங்கி செல்கின்றனர். இது தொடர்பான புகாரை தொடர்ந்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், காட்டிநாயனப்பள்ளி, ஓசூர் அடுத்த சென்னத்தூர் உள்ளிட்ட கடைகளின் விற்பனையாளர்களை கைது செய்தனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஏகாம்பரம் கூறுகையில், தற்போது ரேஷன் கடைகளில் விதிமீறல்கள் நடப்பதை கண்காணிக்க சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விதிமீறல்களில் ஈடுபடும் ரேஷன் கடை விற்பனையாளர்கள், அதிகாரிகள் மீது துறை, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

The post ரேஷன் கடைகளில் விதிமீறலில் ஈடுபட்டால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: