தண்டலம் பகுதியில் தீப்பற்றி எரிந்த கன்டெய்னர் லாரி

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியில் திடீரென கன்டெய்னர் லாரி தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் ஏராளமான பன்னாட்டு, உள்நாட்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மேலும், இங்கிருந்து, பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்காக பல ஆயிரக்கணக்கான கன்டெய்னர் லாரிகள் வந்து செல்கின்றன. இந்நிலையில், இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் உதிரி பாகங்களை இறக்குமதி செய்துவிட்டு, கண்டெய்னர் லாரி ஒன்று சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது, ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியில் சென்றபோது, திடீரென லாரியின் முன் பகுதியில் தீ பிடித்து எரிய தொடங்கியது, சுதாரித்துக் கொண்ட லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் இருவரும் லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு வெளியேறினர். மேலும், தீ மளமளவென எரிய தொடங்கியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தண்டலம் பகுதியில் தீப்பற்றி எரிந்த கன்டெய்னர் லாரி appeared first on Dinakaran.

Related Stories: