ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆளுநர் ரவி பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம்; ஆளுநர் பொறுப்புக்கும் அவர் பேச்சுக்கும் சம்பந்தமே இல்லை: அரசியல் தலைவர்கள் கண்டனம்..!!

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்துக்கு வெளிநாட்டு நிதியே காரணம் என ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றம்சாட்டினார். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்துக்கும் வெளிநாட்டு நிதியே காரணம் என்றும் கூறினார். பேரவை தீர்மானங்களை ஆளுநர் நிலுவையில் வைத்தால் நாகரீகமாக ஒப்புதல் அளிக்கவில்லை என பொருள். வார்த்தை அலங்காரத்துக்காக நிறுத்தி வைப்பு என்கிறோம்; நிறுத்தி வைத்தாலே நிராகரிக்கப்பட்டதாகத் தான் அர்த்தம் எனவும் தெரிவித்தார். ஆளுநர் ரவியின் பேச்சுக்கு அரசியல் கட்சியினர் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில்,

ஆளுநர் என்பவர் ஆளுநராக இல்லை: கே.பாலகிருஷ்ணன்

ஆளுநர் என்பவர் ஆளுநராக இல்லை; அவர் கட்டுப்பாடு இன்றி பேசி வருகிறார் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மசோதாவை நிராகரிப்பதற்கு ஆளுநர் என்பவர் யார்? என்று கேள்வி எழுப்பினார். ஒரு இடத்தில் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் குரலாக பேசுகிறார் ஆளுநர்; மற்றொரு இடத்தில் ஆன்லைன் ரம்மிக்கு ஆதரவாக பேசுகிறார் என்றும் பாலகிருஷ்ணன் சாடினார்.

ஆளுநர் பொறுப்புக்கும் அவர் பேச்சுக்கும் சம்பந்தமே இல்லை: முத்தரசன்

ஆளுநர் பொறுப்புக்கும் அவர் பேச்சுக்கும் சம்பந்தமே இல்லை என்று முத்தரசன் தெரிவித்திருக்கிறார். பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரிக்க ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்து மிகவும் அபத்தமானது. ஆளுநர் அபத்தமான கருத்துகளையே தொடர்ந்து பேசி வருகிறார். ஆளுநரின் செயல் தமிழ்நாடு மக்களை அவமதிக்கும் செயலாகும். தமிழ்நாடு ஆளுநராக ஆளுநர் ரவி நீடிக்கக்கூடாது; அவரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். இதுவரை எந்த ஆளுநரும் இப்படி பேசியது இல்லை.

நிலுவையில் உள்ள 20 மசோதாக்களின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மசோதா நிராகரிக்கப்பட்டதாக கூறுவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் தந்தது யார்? என்று முத்தரசன் கேள்வி எழுப்பினார். தனது அதிகார வரம்புகளையெல்லாம் மீறி ஆளுநர் ரவி தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். தமிழ்நாடு மக்கள் நலன் சார்ந்த மசோதாக்கள் தான் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு ஆளுநர் செயல்படுகிறார் என்று கண்டனம் தெரிவித்தார்.

போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார் ஆளுநர்: காங்.

போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்று காங்கரஸ் கட்சியின் கோபண்ணா கூறியுள்ளார். பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தரவில்லையென்றால் மக்களுக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார் என்று பொருள். அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக ஆளுநர் ரவி செயல்படுகிறார் என காங்கிரஸ் குற்றசாட்டியது. மாநில அமைச்சரவையின் ஆலோசனையை மீறி ஆளுநர் செயல்பட முடியாது. எந்த மசோதாவையும் நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும் கோபண்ணா குறிப்பிட்டார்.

உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார் ஆளுநர்: திருமாவளவன்

தனது கருத்தின் மூலம் ஆளுநர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். அரசமைப்பு சட்டத்தை மதிக்க ஆளுநர் தயாராக இல்லை. ஆளுநரின் போக்கு முற்றிலும் ஜனநாயக விரோத போக்கு; இதனை விசிக கண்டிக்கிறது. பொதுமக்களுக்கு விரோதமான நடவடிக்கை; தான்தோன்றித்தனமாக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநரை வெளியேற்றும் வரை போராட வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை.

அதிகார மமதையுடன் ஆளுநர் செயல்பட்டு வருவதாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டினார். ஆளுநரின் பேச்சு மக்களுக்கு எதிரான நடவடிக்கை; அவரை தமிழ்நாடு மக்கள் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். ஆளுநர் ரவி ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் இருந்து இயங்குகிறார். ஆளுநராக பதவி வகிக்க ஆர்.என்.ரவிக்கு எந்த தகுதியும் இல்லை என்றும் திருமா குறிப்பிட்டார்.

ஸ்டெர்லைட்: ஆளுநரின் பேச்சு ஆணவத்தின் உச்சம்-வைகோ

ஆளுநர் ரவியின் கருத்தை யாரும் ஏற்க மாட்டார்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் எந்த ஆளுநராலும் சொல்லப்படாத அக்கிரமமான வார்த்தையை ஆளுநர் கூறியுள்ளார். வெளிநாட்டில் இருந்து பணம் வாங்கிக் கொண்டு போராட்டம் நடத்தினார்கள் என ஆளுநர் கூறுவது ஏற்கத்தக்கதல்ல.

ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆளுநர் ரவி பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம் என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடினார்கள் என ஆளுநர் உளறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டமே நாசமாகிவிடும் என்று 30 ஆண்டுகளாக போராடியவர்கள் நெஞ்சில் ஈட்டி பாய்கிறது என்றும் வைகோ கூறியுள்ளார்.

The post ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆளுநர் ரவி பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம்; ஆளுநர் பொறுப்புக்கும் அவர் பேச்சுக்கும் சம்பந்தமே இல்லை: அரசியல் தலைவர்கள் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Related Stories: