×

4 நாட்களாகியும் கொள்முதல் செய்யாததால் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் திடீர் சாலை மறியல்

திருவெண்ணெய்நல்லூர், மார்ச் 27:  விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அருங்குருக்கை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் நடராஜன். இவர், அருங்குருக்கை கிராமத்தில் கரும்பு பயிரிட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை அனுப்புவதற்காக அவரது தோட்டத்தில் இருந்த கரும்புகளை வெட்டி லாரியில் ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பெண்ணைவலம் கரும்புக்கோட்ட அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் கரும்பு எடை போடுவதற்கான ட்ரிப்ஷீட் என்கின்ற எடை அனுமதிச்சீட்டு கொடுக்காமல் கடந்த 4 நாட்களாக அலைக்கழித்துள்ளனர்.

இதனால் வெட்டிய கரும்புகள் காய்ந்த நிலையில், கரும்பு சுமையுடன் லாரி கரும்புக்கோட்ட அலுவலகத்திலேயே நின்று கொண்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த நடராஜன் மற்றும் விவசாயிகள் பெண்ணைவலம் கடலூர்-சித்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விவசாயிகளுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியினரும் விவசாயிகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விவசாயிகளிடமும், சர்க்கரை ஆலை நிர்வாகத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தி 4 நாட்களாக வெயிலில் காய்ந்த கரும்பினை சர்க்கரை ஆலைக்கு எடை போட அனுமதிச்சீட்டு வழங்கி கரும்பு லாரியை அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் கடலூர்-சித்தூர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு