இளம்பிள்ளை அருகே விபத்து லாரி மோதி மின்கம்பம், குடிநீர் தொட்டி சேதம்

இளம்பிள்ளை, மார்ச் 25:  இளம்பிள்ளை அருகே லாரி மோதி மின்கம்பம், குடிநீர் தொட்டி சேதமடைந்தது. இதுதொடர்பாக டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இளம்பிள்ளை அருகே சௌடேஸ்வரி நகர் பகுதியில், நேற்று காலை தீவன பாரம் ஏற்றிக்கொண்டு லாரி வந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி, அந்த பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த கம்பம், குடிநீர் தொட்டி ஆகியவற்றின் மீது மோதி நின்றது. இதில், மின்கம்பம் மற்றும் குடிநீர் தொட்டி சேதமடைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அப்போது, அந்த லாரியை ஓட்டி வந்தது நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த நவீன் என்பதும், அவர் மதுபோதையில் லாரியை ஓட்டி வந்ததும் தெரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த வந்த மகுடஞ்சாவடி போலீசார் டிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: