×

மின்சாரம் துண்டிக்காமல் இருக்க மீனவர்கள் தீக்குளிக்க முயற்சி

திருக்கழுக்குன்றம், மார்ச். 22: கல்பாக்கம் அடுத்த புது நடுக்குப்பம் மீனவர் பகுதியில் 2004ம் ஆண்டு சுனாமிக்கு பிறகு வீடுகளின்றி மீனவர்கள் தவித்தனர். இந்நிலையில் அதே கடலோரப்பகுதியில்  சென்னையை சேர்ந்த ஒரு தனிநபருக்கு சொந்தமான இடத்தில் 57 சுனாமி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுனாமிவீடுகள் கட்ட இடம் கொடுத்தவர் ‘தனக்கு கடற்கரை பகுதிக்கு செல்ல வழி வேண்டும். எனவே வழிக்கு தடையாக உள்ள இளமதி என்பவரின் வீட்டை இடித்து வழி தர வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால், அதற்கு இளமதி மறுப்பு தெரிவித்தார். இளமதி மற்றும் அவரது சகோதரர்கள் ஆரணி, வேலாயுதம் ஆகிய 3 குடும்பத்தினர் அந்த சென்னையை சேர்ந்த சுனாமி வீடு கட்டிக் கொள்ள இடம் கொடுத்தவரிடம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.  இதனால், கோபமடைந்த சென்னையை சேர்ந்த அந்த நபர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் எதிர்ப்பு தெரிவித்த 3 சகோதரர்களின் வீடுகளுக்கான மின் இணைப்பை துண்டிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று செய்யூர் மின் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூவத்தூர் போலீசாருடன் அந்த 3 குடும்பத்தினரின் மின் இணைப்பை துண்டிக்கச்சென்றனர். அப்போது, 3 குடும்பத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என சுமார் 10க்கும் மேற்பட்டோர் தங்கள் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டிக்க முடியாத அளவிற்கு மின்கம்பத்தை கட்டி பிடித்துக் கொண்டனர். இதனால் மின் கம்பத்தில் ஏற முடியாமல் மின்வாரிய ஊழியர்கள்  தவித்தனர். மேலும் அவர்கள் கயிற்றால் தூக்குபோட்டுக் கொள்ளவும் முயன்றனர். இதனால்  பல மணி நேரம் போராடியும் கடைசியில் மின் இணைப்பை துண்டிக்க முடியாமல் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் திரும்பிச்சென்றனர்.

Tags :
× RELATED ஏரிகளில் நீர் இருப்பு, கடல்நீரை...