×

லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

கடலூர், மார்ச் 22: கடலூர் அருகே உள்ள கே.என்.பேட்டையில் திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க ெதாட்டி, கட்டுமான பணிக்கு இடையூறாக இருந்ததால் அதை இடித்துள்ளனர். அந்த கட்டிட இடிபாடுகளை அருகில் உள்ள திரவுபதி அம்மன் கோயில் தீக்குழியில் கொட்டியுள்ளனர். மேலும், தூண்களை அகற்றாமல் அப்படியே விட்டுள்ளனர்.
இந்த கோயிலில் அடுத்த வாரம் தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து ஒரு வாரம் ஆகியும், இடிபாடுகள் அகற்றப்படாமல் தீக்குழியில் அப்படியே கிடந்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்பட்டிருந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்களிடம் பொதுமக்கள் கூறுகையில், தீக்குழியில் உள்ள கட்டிட இடிபொருட்களை அகற்ற வேண்டும், சாலை பணியால் கோயிலின் வடிகால் வாய்க்கால் தூர்ந்துவிட்டது. எனவே புதிதாக வடிகால் வாய்க்கால் அமைத்து கொடுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்தனர். இதற்கு நெடுஞ்சாலை பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் தரப்பில் கோரிக்கை நிறைவேற்றி தரப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதன்பேரில் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED `முதியோர் பென்சன் ₹8 ஆயிரம்...