×

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டம்

ஈரோடு, மார்ச்21:  ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கத்தின் தலைவர் துரைராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். இதைத்தொடர்ந்து, கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கலெக்டர் அலுவலக பின்புறம் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் முன் மாற்றுத்திறனாளிகள் திடீர் என தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து அச்சங்க தலைவர் துரைராஜ் கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளாக 83 தகுதியான மாற்றுத்திறனாளிகள் தகுதி இருந்தும், விடுபட்ட 17 மாற்றுத்திறனாளிகள் சேர்த்து 100 பேருக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க மனு அளித்தோம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி முதல்வரால் 33 பேருக்கு மட்டும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. மீதமுள்ள 67 பேருக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். ஈரோடு அரசு மருத்துவமனையில் நரம்பு, பக்கவாத பாதிப்பு பிரச்னைகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு சிகிச்சை மற்றும் சான்றிதழ் மருத்துவரை நியமிக்க பல ஆண்டாக போராடி வருகிறோம். கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமையன்று ஈரோடு அரசு மருத்துவமனை அறை எண்: 12ல் எலும்பு முறிவு புறநோயாளி பிரிவில், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டாக்டர் காஞ்சனா வந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கவும், புறநோயாளிகளை பார்க்கவும் நியமிக்கப்பட்டார்.

2 மாதம் மட்டுமே அவர் சிகிச்சை வழங்கி நிலையில், அவர் நீண்ட விடுப்பில் சென்றுவிட்டார். நரம்பியல், எலும்பு முறிவு சிகிச்சை சான்று பெற, கோவை அல்லது சேலம் செல்லும் நிலையை மாற்ற வேண்டும். ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாகனத்தில் நடைமேடை செல்ல அனுமதிக்க வேண்டும். பேட்டரி காரை மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிக்காக இயக்க வேண்டும். பஸ் ஸ்டாண்டில் மாற்றுத்திறனாளிகள் வாகனம் நிறுத்த வசதி, கழிப்பறை வசதி தேவை. ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளி அலுவலகம் அருகே வசதியான கழிப்பிடம் அமைத்து தர வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றிடக்கோரி தான் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு தெற்கு போலீசார் தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED தமிழக கர்நாடக எல்லையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை