×

மின்துறை தனியார் மயம் கண்டித்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

புதுச்சேரி, மார்ச் 21: புதுச்சேரியில் மின்துறை தனியார் மயத்தை கண்டித்து திமுக- காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.  புதுச்சேரி சட்டசபையில் கேள்விநேரத்தின் போது நடந்த விவாதம் வருமாறு: எதிர்கட்சி  தலைவர் சிவா (திமுக): புதுச்சேரி அரசின் மின்துறைக்கு சொந்தமான இடங்கள்,  மின்சார உபகரணங்கள், தளவாடப்பொருட்களின் மொத்த மதிப்பு  கணக்கிடப்பட்டுள்ளதா? பாலிசிதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட வைப்புநிதி  எவ்வளவு? அது எங்குள்ளது? மின்துறைக்கு அரசுத்துறைகள், தொழிற்சாலைகள்,  வீட்டு உபயோக சந்தாதாரர்களிடம் இருந்து எவ்வளவு மின் கட்டண பாக்கி வசூலிக்க  வேண்டியிருக்கிறது?
அமைச்சர் நமச்சிவாயம்: மின்துறையின் சொத்து மதிப்பு  குறித்து தனியார் ஏஜன்சி மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி சொத்துமதிப்பு சுமார் ரூ.551 கோடியாக இருக்கிறது. அரசுக்கு செலுத்த வேண்டிய மின்கட்டண பாக்கி ரூ.536.74 கோடியை வசூலிக்க வேண்டும்.   
எதிர்கட்சி தலைவர் சிவா (திமுக): தனியார்  ஏஜன்சி மூலம் எடுக்கப்பட்ட கணக்கே தவறானது. சொத்து மதிப்பு மிகக்குறைவாக  மதிப்பிடப்பட்டுள்ளது. புதுச்சேரி மின்துறைக்கு சொந்தமான இடங்கள் எத்தனை  ஏக்கர்? டிரான்ஸ்பார்மர்கள், தளவாடப்பொருட்கள், துணை மின்நிலையங்கள்  இவற்றில் உள்ள அசையா சொத்துக்கள்  மதிப்புகள் குறித்த பட்டியல் இருக்கிறதா?
அமைச்சர் நமச்சிவாயம்:அசையும்  சொத்துக்கள் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது. அசையா சொத்துக்கள் எவ்வளவு  என்பது குறித்த தகவலை துறையிடம் கேட்டு பெற்றுத்தருகிறேன். மேலும் பாலிசிதாரர்களிடம் இருந்து  பெறப்பட்ட டெபாசிட் தொகை 257.43 கோடி ரூபாய் அரசின் கருவூலத்தில் பாதுகாபாக இருக்கிறது.
எதிர்க்கட்சி தலைவர் சிவா: தனியார் மயம் என்ற பெயரில்  புதுச்சேரி அரசின் அசையா சொத்துக்களை தாரை வார்க்க திட்டமிட்டுள்ளீர்கள்,  கேட்டால் சொத்துக்களை இன்னும் முறையாக கணக்கெடுக்கவில்லை என்று  கூறுகிறீர்கள்.
 நாஜிம் (திமுக): தனியார் மயம் என்பது அரசின் கொள்கை முடிவா? இல்லையா? என்பதை தெரிவிக்கவும்.
அமைச்சர்  நமச்சிவாயம்: மின்துறை தனியார் மயம் என்பது அரசின் கொள்கை முடிவு.  இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இதற்குமேல் இதனை  இங்கே விவாதிக்க முடியாது.
எதிர்கட்சி தலைவர் சிவா: மின்துறை தனியார் மய  விவகாரத்தில் ஆளுங்கட்சியினரே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இங்கு அவையின்  முன்னவராக இருக்கும் முதல்வர் ரங்கசாமி இதனை ஏற்றுக்கொள்கிறாரா? என்பதை தெரிவிக்க வேண்டும்.
அமைச்சர்  நமச்சிவாயம்: மின்துறை லாபத்தில் இயங்கவில்லை. நஷ்டத்தில்தான் இயங்குகிறது.  சுமார் 600 ேகாடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. அவைக்கு தவறான தகவலை  தெரிவிக்கக்கூடாது.
எதிர்கட்சி தலைவர் சிவா: சட்டமன்ற உறுப்பினர்களின்  கருத்துக்களுக்கு விரோதமாகவும், மக்கள் எண்ணங்களுக்கு மாறாகவும் மின்துறை  தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம். இவ்வாறு  கூறிவிட்டு திமுக எம்எல்ஏக்க்ள வெளிநடப்பு செய்தனர். இதைடுத்து காங்கிரஸ்  எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : DMK ,Congress ,
× RELATED தேர்தலுக்கு பிறகு எங்கே பாஜ? என்று...