×

சூறைக்காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் கோயில், 10 வீடுகள் இடிந்தது

* நூற்றுக்கணக்கான வாழை, தென்னை மரங்கள் சாய்ந்தது

* முறிந்து விழுந்த மின்கம்பங்கள் சீரமைப்பு பணி தீவிரம்
குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில்

குடியாத்தம், மார்ச் 20: குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சூறைகாற்றுடன் ெபய்த ஆலங்கட்டி மழையால் 10 வீடுகள், கோயில் இடிந்து விழுந்தது. நூற்றுக்கணக்கான வாழை, தென்னை மரங்கள் சாய்ந்தது. முறிந்து விழுந்த மின்கம்பங்கள் சீரமைப்பு பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் பங்குனி வெயில் தீவிரமடைந்து வந்தநிலையில், மாவட்டங்கள் தோறும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து நேற்று அதிகாலை மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, பொன்னை, குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதில் குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் பலத்த சூறைக்காற்று வீசியது, தொடர்ந்து ஆலங்கட்டி மழை பெய்தது. சூறாவளி காற்று வீசியதால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின் தடை ஏற்பட்டது. கோடையில் திடீரென பெய்த பலத்த மழையினால் குடியாத்தம் நகரில் காட்பாடி ரோட்டில் மரங்கள் வேருடன் சாய்ந்தது. கொச அண்ணாமலை தெரு, உள்ளிட்ட தெருக்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் நள்ளிரவில் போக்குவரத்து தடைபட்டது. காமராஜர் பாலத்தில் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துகொண்டது. இதுகுறித்து தகவல் அறிந்த குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி, நகராட்சி தலைவர் எஸ்.சவுந்தரராஜன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் யுவராஜ், நகராட்சி ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், காவல்துறையினர் காட்பாடி ரோட்டில் சுமார் ஒரு மணி நேரம் போராடி சாலையில் சாய்ந்த ராட்சத மரங்களை வெட்டி அகற்றினர்.

மேலும் சூறைகாற்றில் சாலைகளில் விழுந்த 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்களையும் அகற்றினர். அதேபோல் கொச அண்ணாமலை தெருவில், சாய்ந்து கிடந்த மரங்களையும் ஜேசிபி எந்திரங்கள் மூலம் அகற்றினர். குடியாத்தம்- சித்தூர் செல்லும் சாலையில் பாக்கம் பகுதியில் சாலையின் நடுவே இரு பக்கத்திலும் இருந்த புளியமரங்கள் வேருடன் சாய்ந்தது. பலத்த சூறை காற்று வீசியதால் குடியாத்தம் அருகே பாக்கம் கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் மீது மரங்கள் சாய்ந்தன. ஒரு வீட்டின் சிமெண்ட் மேற்கூரை முழுவதும் காற்றில் பெயர்ந்து பறந்துள்ளது. பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இருந்த 4 மரங்கள் சாய்ந்து சுற்று சுவர் சேதமானது. நள்ளிரவில் மரங்கள் வீடுகள் மீது சாய்ந்ததால் பெண்கள், சிறுவர்கள் கடும் அச்சமடைந்தனர்.

பாக்கம் கிராமத்தில் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு குடியாத்தம் சப்-கலெக்டர் வெங்கட்ராமன், ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம், தாசில்தார் விஜயகுமார், மின்வாரிய ஊழியர்கள், தீயணைப்புத் துறையினர், கிராம மக்கள் ஏராளமானோர் சாய்ந்துபோன மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் ஜேசிபி எந்திரங்கள் கொண்டு சாலையில் கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினர். 25க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பிகளையும் அப்புறப்படுத்தினர். அதேபோல் குடியாத்தம் பலமநேர் சாலையில் சாய்ந்த மரங்களையும் ஜேசிபி எந்திரங்கள் கொண்டு அகற்றினார்கள். 4 மணிநேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது. குடியாத்தம்- சித்தூர் சாலையில் 3 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது. இந்த கனமழையால் குடியாத்தம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமானது. குடியாத்தம் அடுத்த உப்பரப்பள்ளி கிராமத்தில் மரம் சாய்ந்து விழுந்ததில் கோயில் இடிந்தது. அதிகளவில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags :
× RELATED சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம்...