×

உயர்கல்வித்துறை அமைச்சரிடம் பேசி திருச்சியில் அரசு மகளிர் கல்லூரி துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்: பள்ளிக்கல்விதுறை அமைச்சர் மகேஷ்பொய்யாமொழி தகவல்

திருவெறும்பூர், மார்ச் 19: திருச்சி மாவட்டத்தில் மகளிர் அரசு கலைக் கல்லூரி தொடங்குவதற்கு உயர் கல்வித்துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்க உள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். திருவெறும்பூர் அருகே அரசு கலைக் கல்லூரி 50வது பொன்விழா ஆண்டு நேற்று நடந்தது. திருச்சி ஆர்டிஓ தவச்செல்வம் தலைமை வகித்து பேசினார். ஆண்டறிக்கை வாசித்த கல்லூரி முதல்வர் ரோஸ்மேரி இக்கல்லூரியில் 800 பேர் அமரக்கூடிய வகையில் ஆடிட்டோரியம் தட்டி தர வேண்டும் கோரிக்கை வைத்தார்.

கல்லூரி கல்வி இணை இயக்குனர் குணசேகரன் பேசும்போது, திருச்சி மாவட்டத்தில் மகளிர் அரசு கலைக் கல்லூரி தனியாக இல்லை. அதனால் தனியாக கல்லூரி தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்கலைக்கழகஅளவில் தர வரிசையில் இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கி பேசியதாவது: கல்லூரி முதல்வரும், கல்லூரி கல்வி இணை இயக்குனர் வைத்த கோரிக்கைகளை உயர்கல்வி அமைச்சரிடம் பேசி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு முன்னதாக மாணவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகம் உயர்த்திய தேர்வு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று கட்டண உயர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தில் அரசு மகளிர் கல்லூரி எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருக்கும் பொழுதே கொண்டு வர வேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். தற்பொழுது அமைச்சர் என்பதை விட எம்எல்ஏ என்ற முறையில் உயர்கல்வித்துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார். திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ், டிஎஸ்பி அறிவழகன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் ஆனந்தி வரவேற்றார். அரசியல் அறிவியல் துறை பேராசிரியரும், துறை தலைவருமான அர்ஜுனன் நன்றி கூறினார்.

Tags : Government Women's College ,Trichy ,Minister of Higher Education ,School Education Minister ,Mahesh Poiyamozhi ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...