×

வேலூர் மாநகராட்சியில் கட்டி முடித்தும் சாரதி மாளிகையில் பயன்பாட்டுக்கு வராமல் பாழடைந்து வரும் பொது கழிவறை கட்டிடம்

வேலூர், மார்ச் 19: வேலூர் மாநகராட்சியின் பெரிய வணிக வளாகமான சாரதி மாளிகை வியாபாரிகள், தொழிலாளர்களுக்காக கட்டப்பட்ட பொது கழிவறை கட்டிடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாததால், பொதுவெளியை பயன்படுத்தி மக்களின் மூச்சடைக்க செய்யும் இடமாக மாறியுள்ளதாக வேதனை குரல்கள் எழுந்துள்ளன.வேலூர் மாநகராட்சியின் மிகப்பெரிய வணிக வளாகமாக சாரதி மாளிகை விளங்குகிறது. இங்கு கடைகள் வைத்துள்ள வியாபாரிகள், பணியாளர்கள், நேதாஜி மார்க்கெட் வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், லாங்கு பஜார் நடைபாதை வியாபாரிகள், மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள், நியூ சிட்டிங் பஜார் வியாபாரிகள் என பல தரப்பினரின் பயன்பாட்டுக்காகவும் சாரதி மாளிகை பின்புறம் மற்றும் மண்டி வீதி, பழைய பஸ் நிலையம் என நான்கு இடங்களில் பொது கழிப்பிடங்கள் மாநகராட்சியால் கட்டப்பட்டன.

இதில் மண்டி வீதி கழிப்பிடம் சாலை விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்டது. சாரதி மாளிகை பின்புறம் உள்ள பழைய கழிவறை கட்டிடம் இடித்து ஏறத்தாழ ரூ.50 லட்சம் செலவில் அடுக்குமாடி கழிவறை கட்டிடமாக கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. பழைய பஸ் நிலையத்தில் மட்டுமே கழிவறை கட்டிடங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் லாங்கு பஜார் வியாபாரிகள், லாங்கு பஜார் நடைபாதை வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், நேதாஜி மார்க்கெட் வியாபாரிகள், தொழிலாளர்கள், நியூ சிட்டிங் பஜார் வியாபாரிகள் அனைவருக்குமான பயன்பாட்டுக்கு கட்டி முடிக்கப்பட்ட சாரதி மாளிகை பின்புறம் உள்ள தரைதளத்துடன் கூடிய அடுக்குமாடி கழிவறை வளாகம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் பூட்டப்பட்டுள்ளது.

இதனால் அதற்கு செல்லும் வழியில் உள்ள பொதுப்பாதை திறந்தவெளி கழிப்பிடமாக மாறி, அவ்வழியை கடந்து செல்லும் பொதுமக்களை மூச்சடைக்க செய்து வருகிறது. அதோடு அந்த இடம் முட்டுச்சந்தாகவும் மாறியிருப்பதால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் அட்டகாசத்தால் அங்கு உடைந்த மதுபாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட நிலையில் பிளாஸ்டிக் கப்புகள் என குப்பைகூளங்களும் நிரம்பி வருகிறது. இத்தனைக்கும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் பாழடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அடுக்குமாடி கழிவறை கட்டிடம் அருகிலேயே சாரதி மாளிகை முன்பகுதியில் மாநகராட்சி வரிவசூல் மையமும், பழைய பஸ் நிலையத்தில் மாநகராட்சி சுகாதாரத்தை கவனிக்கும் அலுவலர்களும் உள்ளனர்.

ஆனாலும், இக்கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் எவ்வித நடவடிக்கையும் மாநகராட்சியால் எடுக்கப்படவில்லை என்கின்றனர் வியாபாரிகள். எனவே, வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அடுக்குமாடி கழிவறை கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூர் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vellore Corporation ,Drithi Mansion ,
× RELATED வேலூர் மாநகராட்சியில் நகரை...