×

தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் கடைகளுக்கு ₹8 ஆயிரம் அபராதம் விதிப்பு வேலூரில் சுகாதாரத்துறையினர் அதிரடி ரெய்டு

வேலூர், மார்ச் 18: வேலூரில் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட் விற்பனை செய்த கடைகளுக்கு ₹8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வேலூர் மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள் பல இடங்களில் விற்பனை செய்வதாகவும், டீ கடைகள், பங்க் கடைகளில் சில்லரையில் சிகரெட்கள் விற்பதாகவும் மாவட்ட சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பானுமதி உத்தரவின்பேரில் வேலூர் மாவட்ட புகையிலை பொருட்கள் தடுப்பு பிரிவு ஆலோசகர் டாக்டர் ஜெய தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் அதிரடியாக சோதனை செய்தனர்.

குறிப்பாக வேலூர் புதிய பஸ் நிலையம், கிரீன் சர்க்கிள், காந்தி ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஒரு கடையில் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் விற்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து 13 சிகரெட் பாக்கெட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அடுத்த முறை மீண்டும் விற்றால் சம்பந்தப்பட்ட கடை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.  தொடர்ந்து சில்லரையில் சிகரெட்களை விற்பனை செய்த கடைகாரர்களுக்கு மொத்தம் ₹8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் போதை பொருட்களான ஹான்ஸ், குட்கா, மாவா போன்ற பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags : Health ,Vellore ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...