(தி.மலை) தார் சாலையாக அமைக்க ₹140 கோடி நிதி ஒதுக்கீடு கலசபாக்கம் எம்எல்ஏ தகவல் செங்கத்தில் இருந்து அமிர்தி வரை செல்லும் பாதையை

ஜவ்வாதுமலை ஒன்றியம் நம்மியம்பட்டு கிராமத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி துவக்க விழா நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் எம்.ஜீவாமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் செ.மகேஸ்வரிசெல்வம் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கா.ரேணுகோபால் வரவேற்றார். சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை கலசபாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் பூஜை போட்டு துவக்கி வைத்து பேசியதாவது: கலசப்பாக்கம் தொகுதியில் ஜவ்வாதுமலை இணைந்துள்ளது. இம்மலையானது திருவண்ணாமலை மாவட்டம் மட்டும் அல்லாது வேலூர் மாவட்டமும் இணைந்து சுற்றுலாத் தலத்திற்கு பெயர் பெற்றதாகும். இம்மலையில் ஏகப்பட்ட மூலிகை மரங்கள் மற்றும் சந்தன மரங்கள் உள்ளன. கடந்த 10 வருடங்களில் இம்மலைக்கும் மலைவாழ் மக்களுக்கும் எந்த ஒரு வளர்ச்சி திட்ட பணிகளையும் செய்யப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று இந்த இரண்டு ஆண்டுகளில் தமிழக முதல்வரின் சீரிய திட்டங்களின் அடிப்படையில் மாவட்டத்தின் அமைச்சர் எ.வ.வேலு செங்கத்தில் இருந்து அமிர்தி வரை செல்லும் சாலையை அகலப்படுத்தி தார் சாலையாக அமைக்க ₹140 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வனத்துறையின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் ₹2 கோடியே 50 லட்சம் மதிபீட்டில் சுற்றுலா மாளிகை கட்டப்பட்டு வருகிறது. வனத்துறைக்கு சொந்தமான 90 இடங்களில் மோசமான நிலையில் உள்ள சாலைகளை தார் சாலையாக அமைப்பதற்கு மக்கள் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவிலூர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த ஆதி அருணாச்சலேஸ்வரர் சிவன் கோயில் பராமரிப்பின்றி இருந்தது.

தற்போது கோயில் கட்டுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை மூலம் ₹3 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது. கூடிய விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். அதனை தொடர்ந்து தாதங்குப்பம் பகுதியில் தீயில் எரிந்து சாம்பலான காஞ்சனாவின் குடும்பத்தினருக்கு தனது சொந்த பணம் வழங்கி வீடு எரிந்தவர்களுக்கு அரசு சார்பில் அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் நா.பிரகாஷ், தாசில்தார் ப.வெங்கடேசன் உட்பட அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: