×

வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் ரூ.55 லட்சத்துக்கு வர்த்தகம்

வேலூர், மார்ச் 15: வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் நேற்று ரூ.55 லட்சம் வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தின் முக்கிய கால்நடை வாரச்சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் இருந்து வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூரு என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதனால் சீசன் நேரங்களில் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும்.

இந்த நிலையில் நேற்று கறவை மாடுகள், ஜெசி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகளும், ஆடுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. மேலும், கோழிகளும் அதிகளவில் விற்பனைக்காக குவிந்து பொய்கை மாட்டுச்சந்தை களைக்கட்டியது. அதேநேரத்தில் கடந்த வாரம் போலவே இந்த வாரமும் வர்த்தகம் ரூ.55 லட்சத்தை தொட்டிருக்கலாம். வரும் காலங்களில் கோடையின் தாக்கம் அதிகரிக்கும். இதனால் தீவனப்பற்றாக்குறையும் பிரச்னையை ஏற்படுத்தும். இதனால் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வருவது அதிகரிக்கும். அதேநேரத்தில் விலையும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றும் விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் தெரிவித்தனர்.

Tags : Vellore ,Poikai Cattle Market ,
× RELATED வேலூர் பொய்கை மாட்டுச்சந்தையில் கால்நடைகள் விற்பனை அமோகம்