கார்மெண்ட்ஸ் நிறுவனத்திற்குள் புகுந்து ₹50 ஆயிரம், செல்போன் பறித்த கும்பல்

ஓசூர், செப்.29: ஓசூர் அருகே தனியார் கார்மெண்ட்ஸ் நிறுவனத்துக்குள் நுழைந்த 3 பேர், உரிமையாளரை தாக்கி ₹50 ஆயிரம் பணம், செல்போனை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அஜித் (27). இவர் ஓசூர் அடுத்த அச்செட்டிப்பள்ளியில் கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நிறுவனத்திற்குள் உள்ள அறையில் தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, நிறுவனத்தின் பின்புற சுவர் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் 3 பேர், தூங்கிக்கொண்டு இருந்த அஜித்தை சரமாரியாக தாக்கினர். பின்னர், கத்தியை காட்டி மிரட்டி, ₹1.50 லட்சம் மதிப்புள்ள டேப்லெட், செல்போன் ஆகியவற்றை பறித்தனர். மேலும், அவர் வைத்திருந்த ₹8 ஆயிரம் மற்றும் அறையில் வைத்திருந்த ₹19 ஆயிரம் ரொக்கத்தை பறித்தவர்கள், அவரது ஏடிஎம் கார்டை பறித்ததுடன், பின் நம்பரை மிரட்டி கேட்டு எடுத்துச்சென்றனர்.

அங்கிருந்து செல்லும் முன்பாக, அலுவலகத்தில் பாதுகாப்பிற்காக பொருத்தி உள்ள சிசிடிவி கேமராக்களை உடைத்த மர்ம நபர்கள், ஹார்ட் டிஸ்க்கை திருடிக்கொண்டு, அஜீத்தை அறைக்குள் வைத்து வெளியே பூட்டிச்சென்றனர்.

மேலும், அவரது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ₹23 ஆயிரம் பணம் எடுத்துள்ளனர். இதனிடையே, அறையின் மேல் உள்ள ஆஸ்பெட்டாஸ் சீட்டை உடைத்துக் கொண்டு வெளியே வந்த அஜீத், இதுகுறித்து மத்திகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: