வேளச்சேரி அருகே பயங்கரம்; ரவுடி வெட்டி படுகொலை: மற்றொருவர் உயிர் ஊசல்

வேளச்சேரி: வேளச்சேரி அருகே ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவருடன் சென்றவரை கும்பல் சரமாரி வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை பள்ளிக்கரணை அம்பேத்கர் குறுக்கு தெரு பகுதியில் சிலர் கத்தி, உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் மோதிக் கொள்வதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்குள்ள முட்புதரில் மேடவாக்கம் புஷ்பாநகரை சேர்ந்த ரவுடி பிரைட் ஆல்வின் (28) என்பவர் தலை, கழுத்து, கை, கால் ஆகிய பகுதிகளில் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

அவருடன் சென்ற பெருமாள் (23) என்பவர் கை, கால்களில் வெட்டுக்காயங்களுடன் மயங்கி கிடந்தார். உடனடியாக, 108 ஆம்புலன்சை சம்பவ இடத்துக்கு வரவழைத்து மயங்கி கிடந்த பெருமாளை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கொலை செய்யப்பட்டு கிடந்த ரவுடி ஆல்வின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், ஆல்வின் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் சூரைமணி என்பவருக்கும், இவருக்கும் கஞ்சா விற்பதில் மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக, ஆல்வின் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் மாமூல் வாங்குவதில் போட்டியா அல்லது குடும்ப பிரச்னையா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: