தேங்கிய மழைநீரில் விழுந்த வாலிபர் பலி

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், பாரதி நகர், அன்னை இந்திரா காந்தி 2வது தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (3). இவர் அதே பகுதியில் எலெக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன், மகள் என 2 பிள்ளைகள் உள்ளனர். கடந்த ஆண்டு பன்னீர்செல்வத்துடன் ஏற்பட்ட தகராறில், அவரது மனைவி கோபித்துக் கொண்டு, பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி, தனியாக பிரிந்து சென்று விட்டார். இதனால், மனவேதனை அடைந்த பன்னீர்செல்வம், அன்று முதல் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

நேற்றும், அதுபோலவே நன்றாக குடித்து விட்டு, தனது வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது தனது வீட்டின் அருகேயுள்ள அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான காலி மைதானத்தில் தேங்கிக் கிடந்த மழைநீரில் கால் தடுமாறி தலை குப்புற விழுந்தார். இதில் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இறந்த பன்னீர் செல்வம் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: