அய்யப்பன்தாங்கல் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு தமிழ்த்தென்றல் திருவிக பெயர் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: அய்யப்பன்தாங்கல் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு திருவிக பெயர் சூட்டுவது குறித்து முதல்வர் முடிவு செய்வார் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். தமிழக அரசு சார்பில், தமிழ் தென்றல் திரு.வி.கலியாண சுந்தரனாரின் 139வது பிறந்தநாளையொட்டி மதுரவாயல் அடுத்த துண்டலம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. பின்னர், அவரது சிலைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திருவிக வாழ்ந்த இல்லம் நூலகமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை இரு அமைச்சர்களும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து, நிருபர்களை சந்தித்து அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழ் அறிஞர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

குறிப்பாக, தமிழறிஞர்களின் நூல்களை அரசுடமையாக்குவது, தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை, பெருமைப்படுத்தும் விதமாக அவர்களின் பெயர்களில் விருது வழங்குவது என  தமிழறிஞர்கள் மீது தனி அக்கறையும், ஆர்வமும் காட்டி வருகிறார். திருவிக வாழ்ந்த துண்டலம் பகுதியில் அவருக்கு நினைவகம் அமைக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அவற்றையும் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நல்ல அறிவிப்பை வெளியிட உறுதுணையாக இருப்போம். ஒவ்வொரு செக்டாரின்படி திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன, தோல் பொருட்களாலான காலணி, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி செய்வதன் மூலம் பலருக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் துறையாக உள்ளது.

வேலைவாய்ப்பு இல்லாத பகுதிகளுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எந்தெந்த துறைகளில் வேலைவாய்ப்பு இருக்கிறதோ அதில் பெருமளவில் அக்கறை காட்டி வருகிறோம். எங்கெங்கு தொழில் வாய்ப்பு உள்ளதோ, வேலைவாய்ப்பு உள்ளதோ அதிலெல்லாம் முதல்வர் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அய்யப்பன்தாங்கல் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு திரு.வி.க. பெயர் வைக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் முடிவு செய்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: