×

ஜிஎஸ்டி 18 சதவீதமாச்சு... ஆட்டம் காணும் கிரைண்டர் தொழில்

கோவை, ஆக.26: கோவை மாவட்டத்தில் மூலப்பொருட்கள் விலை உயர்வு, 18 சதவீத ஜி.எஸ்.டி போன்றவற்றால் வெட் கிரைண்டர் தொழில் ஆட்டம் கண்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட வெட்கிரைண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தின் பிரத்யேக அடையாளமாக வெட்கிரைண்டர் தொழில் இருக்கிறது. வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியிலும் வெட் கிரைண்டர் முதன்மை இடத்தில் இருந்தது. அமெரிக்கா, துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் கிரைண்டர் ஆர்டர்கள் குவிந்து வந்தது.

சப்ளை செய்ய திணறி வந்த வெட்கிரைண்டர் நிறுவனங்கள் இப்போது ஆர்டர் வருமா? என வாசல்படியில் காத்திருக்கும் வருத்தமான சூழல் உருவாகி விட்டது. 5 ஆண்டிற்கு முன் தமிழக அரசின் இலவச வெட்கிரைண்டர் ஆர்டர் காரணமாக உற்பத்தி அதிகமாக இருந்தது. அரசு இலவச கிரைண்டர் திட்டம் முடிந்த பின்னர் ஜிஎஸ்டியால் இந்த ெதாழில் பாதாள நிலைமைக்கு சென்று விட்டது.

ஜிஎஸ்டி கொண்டு வந்த பின்னர் வெட்கிரைண்டர்களுக்கு  28 சதவீதம் போடப்பட்டது. இந்த அதிகமான தொகையால் கிரைண்டர்களின் விலை வெகுவாக உயர்ந்து விடும். ஜிஎஸ்டி குறைக்க கோரிக்கை விடப்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்கு பின்னர், ஜிஎஸ்டி 18 சதவீதம் கொண்டு வரப்பட்டது. அப்படியிருந்தும் இந்த தொழில் முன்னேற்றத்தை எட்டவில்லை. போதாக்குறைக்கு மூலப்பொருட்களின் விலை ஏற்றமும் தொழிலை நசுக்கி வருகிறது.  எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம் என கிரைண்டர் உற்பத்தியாளர்கள் புலம்பி வருகின்றனர். சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டேபிள் டாப் கிரைண்டர் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் விலையிலும், வணிக கிரைண்டர்கள் 15 ஆயிரம் ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரையிலும், பழைய டைப் கிரைண்டர் 4500 ரூபாய் முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து கோவை மாவட்ட வெட்கிரைண்டர் மற்றும் உதிரிபாக உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சவுந்திரகுமார் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் மாதம் 2 லட்சத்திற்கு மேல் கிரைண்டர் உற்பத்தி நடக்க வேண்டும். ஆனால், மாதம் 80 ஆயிரம் அளவிற்கு கூட கிரைண்டர் உற்பத்தி நடப்பதில்லை. 50 முதல் 60 சதவீதம் உற்பத்தி குறைந்து விட்டது. வெட்கிரைண்டர்களுக்கு தேவையான கற்கள் திருப்பூர் ஊத்துக்குளி பகுதியில் இருந்து பெறப்பட்ட வந்தது. அங்கேயும் குவாரிகளில் கல் எடுப்பதில் பல்வேறு சிக்கல் இருக்கிறது.

தேவையான கல் கிடைப்பதில்லை. பற்றாக்குறை நிலைமையால் மதுரையில் இருந்து கிரைண்டர் கல் வாங்கவேண்டியிருக்கிறது. கிரைண்டர்களுக்கு தேவையான ஸ்டீல் பொருட்கள், காப்பர், அலுமினியம், பிளாஸ்டிக் பொருட்களின் விலை உயர்ந்து விட்டது. காஸ்டிங் பொருட்களின் விலையும் உயர்ந்தது. ஒரே ஆண்டில் கிரைண்டர் விலை 1300 ரூபாய் வரை அதிகமாகி விட்டது.

வாங்கும் திறன் குறைவு, பொருளாதார மந்த நிலைமை போன்றவற்றால் ஆர்டர் சரிந்து வருகிறது. ஒரு காலத்தில் கிரைண்டர் வாங்க ஒவ்வொரு குடும்பத்தினரும் ஆர்வம் காட்டினார்கள். ஆனால், இப்போது கடைகளில் காட்சி பொருட்களாக கிரைண்டர்கள் கிடக்கிறது. வெளி மாநில ஆர்டர்களும் வெகுவாக குறைந்து விட்டது. ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைக்கவேண்டும்.
கிரைண்டர் மூலப்பொருட்களின் விலையை பழைய நிலைமைக்கு கொண்டு வரவேண்டும். அப்போது தான் மக்கள் அதிகளவு வாங்கும் திறனுக்கு ஏற்ப குறைந்த விலையில் கிரைண்டர்கள் கிடைக்கும். இந்த தொழிலில் உள்ள சிக்கல், நெருக்கடிகளை தீர்க்க ஒன்றிய, மாநில அரசுகள் முன் வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பாக்கெட் மாவு வாங்குறாங்க...
வீட்டுக்கு ஒரு கிரைண்டர் என்ற நிலைமை மாறி விட்டது. விலைவாசி உயர்வால் கிரைண்டர் வாங்க முடியாத ஏழை, எளிய குடும்பத்தினர் பாக்கெட் அரிசி மாவு வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நடுத்தர குடும்பத்தினரும் மாவு பாக்கெட் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர். மாவட்ட அளவில் 10 ஆண்டிற்கு முன்பே 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கிரைண்டர் விற்பனையானது.

ஆண்டுதோறும் உற்பத்தி அதிகரிக்காமல் குறைந்து வருவதால் தொழில் நடத்துவோர் தவிப்படைந்துள்ளனர். தொழில் சிறப்பாக நடக்கவேண்டிய சூழல் ஏற்படவேண்டும். மக்களுக்கு கிரைண்டர் தேவை அதிகமாக இருக்கிறது. ஆனால் வாங்கும் திறன் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். மூலப்பொருட்கள் விலை குறைப்பு, ஜி.எஸ்.டி சலுகை கிடைத்தால் வெட்கிரைண்டர் ஆட்டம் உச்சத்தை எட்டும் என இந்த தொழில் நடத்துவோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED போக்குவரத்து துறை சார்பில்...