திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் சீமான் வாங்கிய புதிய காருக்கு பூஜை

சென்னை: திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயிலில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வாங்கிய புதிய காருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய நவீன கார் ஒன்றை வாங்கியுள்ளார். கருப்பு நிறத்தில் வாங்கப்பட்டுள்ள டொயாட்டா நிறுவனத்தின் பார்ச்சூனர் ரக காருக்கு திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் நேற்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. முன்னதாக திருப்போரூர் வந்த அவரை நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் எல்லாளன் யூசுப், நகர செயலாளர் சின்னராஜ் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர் கோயிலின் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவரது காரின் சாவி கந்தசுவாமி கோயில் மூலவரின் பாதத்தில் வைக்கப்பட்டு அபிஷேகம் செய்து வழங்கப்பட்டது. கோயில் அர்ச்சகர்கள் வெளியே வந்து காருக்கு பூஜை செய்து அனுப்பி வைத்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு சீமான் தனது குழந்தைக்கு திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மொட்டை அடித்து எடைக்கு எடை அரிசி, வெல்லம் வழங்கியிருந்தார். திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில்தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கும், மதிவதனிக்கும் 1984ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி திருமணம் நடைபெற்றதால் சீமான் இந்த கோயிலுக்கு வந்து வழிபடுவது குறிப்பிடத்தக்கது. சீமான் வாங்கி உள்ள காரின் தற்போதை சந்தை மதிப்பு 49 லட்சத்து 57 ஆயிரம் என கூறப்படுகிறது.

Related Stories: