எல்ஐசி முகவரிடம் ரூ.98 ஆயிரம் மோசடி

ராமநாதபுரம், மே 25:  பரமக்குடி தெளிச்சாத்தநல்லூர் அருகே வள்ளியனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பணன் மகன் கரிசாமி(35). எல்ஐசி முகவராக பணியாற்றி வருகிறார். பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவன விளம்பரம் அடிப்படையில், காலணி,  வாட்ச் பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கினார். மே 16ல் அந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் இருந்து கரிசாமிக்கு தபால் வந்தது. அதில் இருந்த பரிசு கூப்பனை சுரண்டி பார்த்த போது, ரூ.9.50 லட்சம் பரிசு தொகை விழுந்துள்ளதாகவும், பரிசு தொகையை பெற வேண்டுமெனில் முழு விபரங்களை பூர்த்தி செய்து நிறுவனம் தெரிவித்த வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

இதன்படி அனைத்து விபரங்களையும் கரிசாமி அனுப்பி வைத்தார். மே 19ல் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய நபர் பரிசு தொகை பெற வேண்டுமெனில் ரூ.97 ஆயிரத்து 700ஐ வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டும் என கூறினார். இதையடுத்து அந்த வங்கி கணக்கிற்கு கரிசாமி தொகையை அனுப்பினார். ஆனால் பரிசு தொகை கிடைக்கவில்லை. எனவே ஆன்லைன் வர்த்தக நிறுவனம் தெரிவித்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். ஆனால் எவ்வித பதிலுமில்லை. இதையடுத்து பரிசு விழுந்ததாக கூறி தன்னை ஏமாற்றியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இழந்த பணத்தை மீட்டுத்தர வேண்டும் என காவல்துறை இணையதள முகவரியில் புகாரளித்தார். இதன்படி ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.  

Related Stories: