முன்விரோதம் காரணமாக பிளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவனுக்கு கத்திக்குத்து: ராயப்பேட்டையில் பரபரப்பு சம்பவம்

சென்னை: ராயப்பேட்டை பி.எம்.தர்கா இஸ்மாயில் கிரவுண்ட் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (20). ஆன்லைன் நிறுவனம் ஒன்றில் ெடலிவரி ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், ராயப்பேட்டை சைவ முத்தையா 6வது தெருவை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ் 2 மாணவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த மாணவன், பள்ளிக்கு செல்லும்போது கார்த்திக் அடிக்கடி அவனை வழிமறித்து தாக்கி, ‘உன்னை காலி செய்துவிடுவேன்,’ என்று மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவன், கடந்த மார்ச் 15ம் தேதி இரவு ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை மற்றும் பி.எம்.தர்கா மெயின் தெரு சந்திப்பில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கார்த்திக்கை, அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியுள்ளான். இதில், படுகாயமடைந்த கார்த்திக்கை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் கார்த்திக் இதுகுறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், மாணவன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, கெல்லீஸ் அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். தற்போது, பிளஸ் 2 இறுதியாண்டு தேர்வு நடைபெறுவதால், தன்னை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும், என சீரார் நீதிமன்றத்தில் மாணவன் மனு செய்தார். அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, ராயப்பேட்ைடயில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் மாணவன் தேர்வு எழுதி வந்தார். நேற்று மதியம் 1.30 மணிக்கு தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவன், தனது தந்தை சண்முகத்துடன் வீட்டிற்கு  சென்று கொண்டிருந்தான். இதுபற்றி அறிந்த கார்த்திக், மாணவனை பழிதீர்க்க திட்டமிட்டு, வி.எம்.தெரு, பெர்தோஷ் தெரு சந்திப்பில் கத்தியுடன் காத்திருந்தார்.

மாணவன் தனது தந்தையுடன் சென்றபோது, அங்கு மறைந்திருந்த கார்த்திக், திடீரென கத்தியால் மாணவனின் வலது பக்க கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பினார். ரத்த வெள்ளத்தில் துடித்த மகனை, சண்முகம் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அதிகளவில் ரத்த காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக டாக்டர்கள் பரிந்துரைப்படி மாணவனை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து மாணவனின் தந்தை சண்முகம் அளித்த புகாரின் பேரில், ராயப்ேபட்டை போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவாக உள்ள கார்த்திக்கை தேடி வருகின்றனர். பழிக்கு பழி நடந்த இந்த சம்பவத்தால் சிறிது நேரம் ராயப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: