ஊத்தங்கரையில் கனமழை சூறைக்காற்றுக்கு வாழை, தென்னை மரங்கள் சேதம் வீடுகளும் இடிந்து விழுந்தன

ஊத்தங்கரை, ஏப்.19: ஊத்தங்கரை, கல்லாவியில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் வாழை மற்றும் தென்னை மரங்கள் முறிந்து சேதமானது. மேலும் வீடுகளும் இடிந்து விழுந்தன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் சற்று தணிந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, ஊத்தங்கரை, கல்லாவி மற்றும் சுற்றுவட்டாரத்தில் இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் மேட்டுத்தாங்கல் ஊராட்சி பச்சினாம்பட்டி கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவரது விவசாய நிலத்தில் இருந்த சுமார் 500 வாழை மரங்கள் சூறைக்காற்றுக்கு முறிந்து நாசமானது. அதே பகுதியை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவரின் ஓட்டு வீடு, மரம் விழுந்ததில் சேதமடைந்தது.

மேட்டுத்தாங்கல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது நிலத்தில் இருந்த தென்னை மற்றும் வாழை மரங்களும், ஆறுமுகம் என்பவரது 2 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்களும், வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது வீடும் சேதமானது. மேலும், சில வீடுகளின் சுற்றுச்சுவர்களும் இடிந்து விழுந்தன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘பல ஆண்டுகளுக்கு பிறகு பலத்த இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழையால் வாழை  மரங்கள், தென்னை மரங்கள், விவசாய பயிர்கள் நாசமாகியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்,’ என்றனர்.நேற்று காலை 8 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: போச்சம்பள்ளி 22.2, பாரூர் 19.2, ராயக்கோட்டை 17, நெடுங்கல் 14, பெனுகொண்டாபுரம் 12.2, கிருஷ்ணகிரி 10.8, அஞ்செட்டி 4.8, ஓசூர் 2, தேன்கனிக்கோட்டை 2 என மொத்தம் மாவட்டம் முழுவதும் 104.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இரவு முழுவதும் சாரல் மழை பெய்ததால், பாரூர் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Related Stories: