செம்பரம்பாக்கம் ஏரியை திறந்ததால் பலர் இறந்தனர்: வருவாய் துறை அமைச்சர் பேச்சு

சென்னை: சட்டப்பேரவையில் வருவாய் துறை மானிய கோரிக்கையில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் (அதிமுக) பேசியதாவது: அதிமுக ஆட்சியில், புயல் பாதிப்பின்போது  மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்துக்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து ஆய்வு செய்தார்.

அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன்: அதிமுக ஆட்சியில் இருந்தபோது அவர் வந்தார். திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பின்போது முதல்வர் மு.க.ஸ்டாலினும் அங்கு வந்தார். அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரி திடீரென திறந்து விடப்பட்டதால் பலர் உயிரிழந்தனர். கடந்த மழையின்போது, நாங்கள் நேரடியாக அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டோம். ஒரு அசம்பாவிதம் கூட ஏற்படவில்லை.

அமைச்சர் சேகர்பாபு: கடந்த ஆண்டு 45 நாட்கள் தொடர் மழை பெய்தது. அத்தனை நாளும் முதல்வர் மழை வெள்ள பாதிப்பையும், நிவாரணப் பணிகளையும் பார்வையிட வந்தார். சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க கடந்த 4 மாதத்தில் மட்டும் ரூ.120 கோடியில் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.1000 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் போட்டு, ஒரு சொட்டு தண்ணீர்கூட இனி சென்னையில் தேங்காது என்று சொன்னீர்கள். அது நடந்ததா?.

அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் எப்போதும் தண்ணீர் தேங்காத தியாகராயநகர் பகுதியில் வெள்ளநீர் தேங்கியது. தண்ணீர் வெளியேறும் பாதையில் மணலை கொட்டி வைத்திருந்தீர்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: