வேன் மோதி கல்லூரி மாணவி பலி

பெரும்புதூர்: மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் பிரியதர்ஷினி (22). படப்பை பகுதியில் உள்ள தனது சித்தப்பா சந்திரமோகன் (41) வீட்டில் தங்கி, சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை பிரியதர்ஷினி, கல்லூரிக்கு புறப்பட்டார்.

தொடர்ந்து, வண்டலூர் - வாலாஜாபாத் சாலை படப்பை பகுதியில், தனது சித்தப்பாவுடன் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது வண்டலூர் நோக்கி வேகமாக சென்ற மினி வேன், சாலையோரம் நின்றிருந்த பிரியதர்ஷினி, சந்திரமோகன் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த பிரியதர்ஷினி சம்பவ இடத்திலேயே இறந்தார். சந்திரமோகன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

தகவலறிந்து மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் சின்ராஜ் (22) என்பவரை கைது செய்தனர்.

Related Stories: