மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரூ.8 கோடி மதிப்பிலான 1 கிரவுண்ட் சொத்துகள் மீட்பு: அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை

சென்னை: மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரூ.8 கோடி மதிப்பிலான 1 கிரவுண்ட் சொத்துகளை மீட்டு அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாதவ பெருமாள் கோயிலுக்கு சொந்தமாக மயிலாப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள்  மற்றும் கடைகள் உள்ளன. இதில், மயிலாப்பூர் கச்சேரி சாலையில் 1 கிரவுண்ட் (2,400 சதுர அடி) பரப்பு கொண்ட தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய கட்டிடம் ஒன்றும் உள்ளது. இந்த கட்டிடத்தை ஸ்ரீராமுலு செட்டியார் அறக்கட்டளை சார்பில், மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயிலுக்கு தானமாக ஒப்படைக்கப்பட்டன. கட்டிடத்தில் ஏற்கனவே வாடகையில் இருந்தோர், கோயில் நிர்வாகத்துக்கு வாடகை பாக்கி செலுத்த முன்வரவில்லை. இது தொடர்பாக, கோயில் நிர்வாகம் சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ஆனாலும் வாடகைதாரர்கள் வாடகை செலுத்த முன்வராத நிலையில், கடந்த 1992ம் ஆண்டு சென்னை மாநகர 5வது உரிமையியல் நீதிமன்றம் சார்பில் மாதவ பெருமாள் கோயில் நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக  நடந்து வந்தது. இந்நிலையில், வாடகை பாக்கி மற்றும் உள் வாடகைதாரரர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி அவர்களை வெளியேற்ற கடந்த 17ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில், மாதவ பெருமாள் கோயில் செயல் அலுவலர்  ஜெயபிரகாஷ் நாராயணன், நீதிமன்ற அலுவலர் அமீனா முன்னிலையில் நேற்று சுவாதீனம் செய்யப்பட்டன. தொடர்ந்து, கோயில் நிர்வாகம் சார்பில் அந்த கட்டிடத்துக்கு  பூட்டுக்கள் பூட்டப்பட்டு கோயிலின் முத்திரையிடப்பட்டு, அதன் வசம்  ஒப்படைக்கப்பட்டன. இந்த சொத்தின் மதிப்பு சுமார் ரூ.8 கோடி என்று  கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: