சிவகங்கை மாவட்டத்தில் 4 நகராட்சி, 11 பேரூராட்சிக்கு தேர்தல்: பிப்.19ம் தேதி வாக்குப்பதிவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 4 நகராட்சி, 11 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகள் உள்ளன. நேற்று முன்தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. இன்று முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி பிப்.4ல் முடிவடைகிறது. பிப்.19ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு நகராட்சிகளில் காரைக்குடி நகராட்சி 44 ஆயிரத்து 848 ஆண், 46 ஆயிரத்து 835 பெண், பிற பாலினத்தவர் 8 உட்பட மொத்தம் 91 ஆயிரத்து 691 வாக்காளர்களுடன் அதிக வாக்காளர்களை கொண்ட நகராட்சியாக உள்ளது. குறைந்த வாக்காளர்களை கொண்ட நகராட்சியாக சிவகங்கை உள்ளது. இங்கு 17 ஆயிரத்து 879 ஆண், 18 ஆயிரத்து 613 பெண் உள்பட மொத்தம் 36 ஆயிரத்து 492 வாக்காளர்கள் உள்ளனர்.

தேவகோட்டை நகராட்சியில் 20 ஆயிரத்து 86 ஆண், 21 ஆயிரத்து 405 பெண், பிற பாலினத்தவர் இருவர் உள்பட மொத்தம் 41 ஆயிரத்து 493 வாக்காளர்கள் உள்ளனர். மானாமதுரை நகராட்சியில் 25 ஆயிரத்து 212 வாக்காளர்கள் உள்ளனர். சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகளும், காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகளும், தேவகோட்டை நகராட்சியில் 27 வார்டுகளும், மானாமதுரை நகராட்சியில் 27 வார்டுகளும் உள்ளன.

மாவட்டத்தில் உள்ள 11 பேரூராட்சிகளில் மொத்தம் 168 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு 205 வாக்குச்சாவடிகளில் நடக்க உள்ளது. இதில் அதிக வாக்காளர்களை கொண்ட பேரூராட்சியாக திருப்பத்தூர் உள்ளது. இங்கு மொத்தம் 23 ஆயிரத்து 729 வாக்காளர்கள் உள்ளனர். இளையான்குடியில் 20 ஆயிரத்து 878, நாட்டரசன்கோட்டையில் 5 ஆயிரத்து 529, திருப்புவனத்தில் 20 ஆயிரத்து 370, கானாடுகாத்தானில் 4 ஆயிரத்து 813, கண்டனூரில் 6 ஆயிரத்து 559, கோட்டையூரில் 14 ஆயிரத்து 450, பள்ளத்தூரில் 8 ஆயிரத்து 676, புதுவயலில் 9 ஆயிரத்து 516, நெற்குப்பையில் 6 ஆயிரத்து 318, சிங்கம்புணரியில் 16 ஆயிரத்து 236 வாக்காளர்கள் உள்ளனர். 11 பேரூராட்சிகளில் மொத்தம் 168 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு 205 வாக்குச்சாவடிகளில் நடக்க உள்ளது.

மானாமதுரை நகராட்சி தலைவர் பதவி ஆதி திராவிடர்(பொது) பிரிவிற்கும், சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை நகராட்சி தலைவர் பதவிகள் பொது பிரிவிற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 11 பேரூராட்சிகளில் நாட்டரசன்கோட்டை, திருப்பத்தூர், பள்ளத்தூர், கானாடுகாத்தான், கண்டனூர் ஆகிய ஐந்து பேரூராட்சி தலைவர் பதவிகள் பெண்கள்(பொது), சிங்கம்புணரி, நெற்குப்பை, திருப்புவனம், இளையான்குடி, கோட்டையூர், புதுவயல் பேரூராட்சி தலைவர் பதவிகள் பொது பிரிவிற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

Related Stories: