சட்டக்கல்லூரி மாணவன் தாக்கப்பட்ட விவகாரம்: போலீசாரிடம் ஆர்டிஓ விசாரணை

பெரம்பூர்: கொடுங்கையூரில் கடந்த 13ம் தேதி சட்டக் கல்லூரி மாணவன் அப்துல் ரஹீம் முகக்கவசம் அணியவில்லை என்று கூறி கொடுங்கையூர் போலீசார், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, கடுமையாக அடித்தனர். இதுதொடர்பாக, நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர கமிஷனரிடம் அப்துல் ரஹீம் புகார் மனு அளித்திருந்தார். அதன்பேரில், காவலர் உத்திரகுமார், தலைமை காவலர் பூமிநாதன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது.

மேலும், சம்பவத்தன்று இரவு பணியில் இருந்த எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நசீமா, காவலர்கள் உத்திரகுமார், ஹேமநாதன், சத்யராஜ், ராமலிங்கம், அந்தோணி, தலைமை காவலர் பூமிநாதன் உட்பட 9 காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த வழக்கை ஆர்.டி.ஓ விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள சட்டக்கல்லூரி மாணவன் அப்துல் ரஹீமிடம் ஆர்.டி.ஓ கண்ணப்பன் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, நேற்று இன்ஸ்பெக்டர் நசீமா உட்பட 9 காவலர்களும், தண்டையார்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி ஆர்.டி.ஓவிடம் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்தனர். ஒவ்வொருவரிடமும் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. அவர்கள் கூறிய தகவல்கள் தட்டச்சு, ஆடியோ மற்றும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. மேலும், சிலரிடம் விசாரணை நடத்தவும், அப்துல்ரஹீம் மற்றும் அவரது  நண்பர்களிடம் விசாரணை நடத்தபட உள்ளதாகவும் ஆர்.டி.ஓ தரப்பில் கூறப்படுகிறது.

ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஆஜராக வரும் போலீசாரை படம் பிடிக்க நேற்று காலை பத்திரிகையாளர்கள் அங்கு திரண்டனர். அப்போது, காவலர்கள் ஒவ்வொருவராக உள்ளே சென்றனர். ஆர்.டி.ஓ வருகைக்காக காத்திருந்தனர். ஆனால், சிறிது நேரத்தில் காவலர்கள் அனைவரும் வெளியே வந்து,  தண்டையார்பேட்டை இரட்டை குழி தெரு பகுதியில் உள்ள தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு விசாரணை நடந்தது.

மாணவன் மீது 4 பிரிவில் வழக்கு: சட்டக்கல்லூரி மாணவன் அப்துல் ரஹீம் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்க்க ஏராளமான கூட்டம் வருவதாக கூறப்படுகிறது. கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் உள்ளதால் இங்கு வந்து செல்பவர்களால் தொற்று பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பேச்சை கேட்காமல் அப்துல் ரஹீம் மற்றும் அவரது நண்பர்கள் தொற்று ஏற்படும் விதத்திலும் அங்குள்ள நோயாளிகளுக்கு தொல்லை கொடுக்கும் விதத்திலும் செயல்பட்டதால், ஸ்டான்லி மருத்துவமனையின் தலைமை நிலைய அலுவலர் ரமேஷ் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின்பேரில், அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: