ஆட்டோவை முந்தி செல்ல முயன்றபோது விபத்து பைக் மீது கழிவுநீர் லாரி மோதி மகன் கண்ணெதிரே தந்தை பலி

பல்லாவரம்: பல்லாவரம் அரசமரம் தெருவை சேர்ந்தவர் குப்பன்(48). கட்டிட தொழிலாளி. நேற்று காலை அனகாபுத்தூரில் கட்டிட வேலைக்காக தனது பைக்கில் சென்றார். பைக்கை அவரது மகன் விஜய்(23) ஓட்டினார். பம்மல் பிரதான சாலையில் வந்தபோது, முன்னே சென்று கொண்டிருந்த ஆட்டோவை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்பாராதவிதமாக இவர்களது பைக் கீழே சரிந்தது. இதில் குப்பன் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது, அனகாபுத்தூர் சர்வீஸ் சாலையில் கழிவுநீரை ஊற்றிவிட்டு பல்லாவரம் நோக்கி வேகமாக வந்த கழிவுநீர் லாரி கண்ணிமைக்கும் நேரத்தில்  குப்பன் மீது ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி, மூளை சிதறி குப்பன் சம்பவ இடத்திலேயே மகன் கண்ணெதிரே பரிதாபமாக உயிரிழந்தார்.

விஜய் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவலறிந்த சங்கர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  குப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்படி குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லாரி ஓட்டுநரை  தேடி வருகின்றனர். மற்றொரு சம்பவம்: செங்குன்றம் அடுத்த எடப்பாளையம் பாலாஜி கார்டன்  பகுதியை  சேர்ந்தவர் சத்தியா. இவரது மகன்கள் உதயா (எ) உதயகுமார்(13), லோகேஷ்வரன்(11) இருவரும் நேற்று மாலை செங்குன்றம் சென்று விட்டு பைக்கில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது எடப்பாளையம், திருவள்ளூர் நெடுஞ்சாலை ஓரத்தில் நின்றிருந்த லாரியின் பின்னால் மோதி இருவரும் பரிதாபமாக  பலியாகினர். இதேபோல், மாதவரம் தணிகாசலம் நகர் 3வது பிரதான சாலையை சேர்ந்த பிரசாத்(19), பெரம்பூர் வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்த சங்கர்(19), பைக்கில் நேற்று காலை சோழவரம் அடுத்த அழிஞ்சிவாக்கம் ஜி.என்.டி சாலையில் சென்றனர். அப்போது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி சென்றபோது, டிராக்டர் மீது மோதி பிரசாத் பரிதாபமாக பலியானார். சங்கர் படுகாயமடைத்துடன் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

Related Stories: