பெரியகலையம்புதூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வேண்டும் கிராமமக்கள் கலெக்டரிடம் மனு

திண்டுக்கல், ஜன.20: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரக்கோரி கலெக்டரிடம் பழநி பொதுமக்கள் மனு அளித்தனர். பழநியை அடுத்துள்ள நெய்க்காரபட்டி பேரூராட்சி பெரியகலையம்புதூரில் உள்ள ஹைக்கோர்ட் பத்ரகாளியம்மன் கோவில் மைதானத்தில் ஆண்டுதோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெறும். சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டு விழாவை இந்த ஆண்டு வருகிற பிப்.9ம் தேதி நடத்துவதற்கு அனுமதி கேட்டு கலெக்டர் விசாகனிடம் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் மனு அளித்தனர்.

பொது மக்கள் சார்பில் தங்கம் என்பவர் கூறுகையில், 400 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கமாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியானது, இந்த ஆண்டு கொரோனா காரணமாக நடைபெறுமா என்ற அச்சம் இருந்து வந்தது. இந்நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்திக்கொள்ள அனுமதி அளித்ததுடன், அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. எனவே நெய்க்காரப்பட்டி பெரியகலையம்புதூரில் வருகிற பிப்.9ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடிவு செய்து தாசில்தாரிடம் அனுமதி கோரி மனு அளித்துள்ளோம். ஆண்டுதோறும் ஜன.15ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா கொரோனா காரணமாக காலதாமதம் ஆனதால் பிப்ரவரியில் நடத்த முடிவு செய்துள்ளோம்.

மேலும் பிப்.14ம் தேதியுடன் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் வீரர்களுக்கான காப்பீடுக்கான தேதி முடிவடைய உள்ளதால் பிப்.9ம் தேதியே போட்டியை நடத்திக் கொள்ள அனுமதி கோரியுள்ளோம். தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று தெரிவித்தனர். இதேபோல், கலெக்டர் நேர்முக உதவியாளர் மாறனிடம் குட்டத்து ஆவாரம்பட்டி பொதுமக்கள் அளித்த மனுவில், பில்லமநாயக்கன்பட்டி, புகையிலைபட்டி, குட்டத்து ஆவாரம்பட்டி ஆகிய கிராமங்களில் அரசின் கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி நாங்கள் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தயாராக உள்ளோம். குட்டத்து ஆவாரம்பட்டியில் பிப்.24, 25, 26 ஆகிய தேதிகளில் விழாக்கள் நடக்கிறது. 26ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: