×

அரசு பஸ்சில் மது கடத்தல்

கிருஷ்ணகிரி, ஜன.20: கிருஷ்ணகிரி புதிய பஸ்நிலையத்தில், கடந்த 17ம் தேதி டிக்கெட் பரிசோதகராக ஜெயவேலு ஆய்வு மேற்கொண்டார். அப்போது நுழைவு வாயிலில், பெங்களூருவில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ்சை நிறுத்தி சோதனையிட்டார். அந்த பஸ்சில் கேட்பாரற்று 2 பேக்குகள் இருந்தது. அது யாருடையது என கேட்ட போது யாரும் எதுவும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்த தகவலின் பேரில், போலீசார் வந்து சோதனை செய்த போது, ஒரு பேக்கில் ₹30 ஆயிரம் மதிப்பிலான 500 குவார்ட்டர் பாட்டில்களும், மற்றொரு பேக்கில் ₹5 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்களும் இருந்தது. இதையடுத்து பஸ்சில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, விழுப்புரம் மாவட்டம் அடூர்குழப்பாக்கம் சேர்ந்த காமராஜ்(50) மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் செருமந்தலூர் குப்புசாமி மனைவி உத்தராம்பாள்(34) ஆகியோரது பேக்குகள் என்பதும், விற்பனை செய்ய அவற்றை கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், குவார்ட்டர் பாட்டில்கள், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காமராஜை ஓசூர் கிளை சிறையிலும், உத்தராம்பாளை கிருஷ்ணகிரி கிளை சிறையிலும் அடைத்தனர்.

Tags :
× RELATED கிருஷ்ணகிரியில் 47.4 மி.மீ மழை